ஊரடங்கு உத்தரவால் மகள், பேத்தியுடன் செஸ் விளையாடிய சரத்பவாா்


ஊரடங்கு உத்தரவால் மகள், பேத்தியுடன் செஸ் விளையாடிய சரத்பவாா்
x
தினத்தந்தி 26 March 2020 5:39 AM IST (Updated: 26 March 2020 5:39 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் சரத்பவார் அவரது மகள் மற்றும் பேத்தியுடன் செஸ் விளையாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மும்பை, 

மராட்டியத்தின் மூத்த அரசியல் தலைவரான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அரசியல் சாணக்கியர் என பலராலும் அழைக்கப்படுகிறார். கொரோனா வைரசால் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சரத்பவார் வீட்டில் முடங்கி உள்ளார்.

இந்தநிலையில் அவர், மகள் சுப்ரியா சுலே மற்றும் பேத்தி ரேவதியுடன் செஸ் விளையாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. சரத்பவார் வீட்டில் செஸ் விளையாடும் வீடியோவை அவரது மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

மேலும் அவர், ‘‘எனது தந்தையுடன் செஸ் விளையாடுவது எளிதானது அல்ல. அவர் என்னையும், எனது மகளையும் சில நிமிடங்களில் தோற்கடித்துவிடுவார். நாங்கள் புத்தகங்கள் படிக்கிறோம். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகிறோம். நீங்களும் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.

சுப்ரியா சுலேவின் இந்த பதிவை அடுத்து, ‘‘அரசியல் சதுரங்கத்தில் மட்டுமல்ல, நிஜ சதுரங்கத்திலும் சரத்பவாரை வீழ்த்துவது கடினம் தான் போல’’ என பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Next Story