மயிலம் அருகே, லாரி மீது ஆட்டோ மோதல்; 2 பேர் சாவு - 144 தடை உத்தரவால் சொந்த ஊருக்கு திரும்பியபோது சோகம்
மயிலம் அருகே 144 தடை உத்தரவு காரணமாக, சொந்த ஊருக்கு திரும்பிய போது லாரி மீது ஆட்டோ மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
மயிலம்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.மாத்தூரை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் வடிவேல்(வயது 32). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரண்யா(28). இவர்களுக்கு தமிழ்கவி(6) என்கிற மகள் உள்ளார். வடிவேல் சென்னை வேளச்சேரியில் குடும்பத்தோடு தங்கியிருந்து ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நேற்று முன்தினம் மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இதையடுத்து, வடிவேல் தனது ஆட்டோவில் மனைவி, மகளுடன் சொந்த ஊரான வி.மாத்தூருக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார்.
திண்டிவனம் அருகே வந்தபோது ஆவடியார்பட்டை சேர்ந்த தனுசு மனைவி லட்சுமி(35), தனது குழந்தைகள் செந்தமிழ்செல்வன்(10), முத்துலட்சுமி(8) ஆகியோருடன் தனது ஊருக்கு செல்ல பஸ் வசதி இல்லாமல் நின்று கொண்டிருந்தார். இவர்கள், வடிவேலின் ஆட்டோவில் லிப்ட் கேட்டு ஏறினர்.தொடர்ந்து மயிலம் கூட்டேரிப்பட்டில் வந்த போது, நெடிமொழியனூரை சேர்ந்த ராஜேந்திரன்(60) என்பவரும் ஏறினார். பின்னர் அங்கிருந்து ஆட்டோ புறப்பட்டு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற லாரி மீது ஆட்டோ திடீரென மோதியது.
இதில் ஆட்டோவில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வடிவேல், ராஜேந்திரன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சரண்யா, தமிழ்கவி, லட்சுமி, செந்தமிழ்செல்வன், முத்துலட்சுமி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story