கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 100 படுக்கை வசதியுடன் கொரோனா சிறப்பு வார்டு தயார் - கலெக்டர் கிரண்குராலா தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் கிரண் குராலா தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி,
கொரோனா நோய் பாதித்த வெளிநாடுகளில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வந்தவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள். அந்த வகையில் சுமார் 200 பேர் கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 100 படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வார்டை மாவட்ட கலெக்டர் கிரண்குராலா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை யாரும் கொரோனா நோயால் பாதிக்கப்படவில்லை என்றாலும் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டை தயார் செய்து வைத்திருக்கிறோம். சிறப்பு வார்டில் வென்டிலேட்டர், தீவிர சிகிச்சை பிரிவுகளும் தயாராக உள்ளது. இதுதவிர கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்ய முடியுமா? என்று ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு கலெக்டர் கிரண் குராலா கூறினார்.
அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு மற்றும் டாக்டர்கள் பழமலை, கணேஷ்ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story