ஊரடங்கு அமல்: நாகை மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள்


ஊரடங்கு அமல்: நாகை மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள்
x
தினத்தந்தி 26 March 2020 3:45 AM IST (Updated: 26 March 2020 9:22 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு அமலையொட்டி நாகை மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடியது. தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை போலீசார் அடித்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவையொட்டி நாகை மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் மருந்து கடைகள், காய்கறி மற்றும் மளிகை கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் நேற்று மூடப்பட்டு இருந்தன.

ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அத்தியாவசிய தேவைகள் இன்றி கார், மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை எச்சரித்து அனுப்பினர். கடைகள் மூடப்பட்டு இருந்ததால் நாகை, மயிலாடுதுறை, சீர்காழி வைத்தீஸ்வரன்கோவில் உள்ளிட்ட பகுதியில் சாலைகள் வெறிச்சோடின. மீன், இறைச்சி கடைகள் வழக்கம்போல் திறந்து இருந்தன.

வேளாங்கண்ணி செல்லும் சாலையில் உள்ள பரவை காய்கறி மார்க்கெட்டுக்கு கூட்டமாக வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் அங்குள்ள சோதனை சாவடி அருகே தேவையில்லாமல் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்தவர்களை போலீசார் அடித்து விரட்டினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட திட்டச்சேரி, திருமருகல், ஏனங்குடி, புத்தகரம், வடகரை, கோட்டூர், வவ்வாலடி, திருப்புகலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டன. புதுச்சேரி மாநில எல்லையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களை தமிழக எல்லைக்குள் விடாமல் மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் திருப்பி அனுப்பினர். ஊரடங்கு காரணமாக நாகூர் அலங்கார வாசல், நியூ பஜார் சாலையில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.

வேதாரண்யத்தில் மருந்து கடைகள், மளிகை கடைகள், பால் விற்பனை நிலையம், ஓட்டல்கள் திறந்து இருந்தன. கடைகளுக்கு பொருட்கள் வாங்க வந்தவர்களை 1 மீட்டர் இடைவெளி விட்டு நிற்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். கோடியக்காடு பகுதியில் உள்ள உப்பள தொழிற்சாலைக்கு வந்தவர்களை போலீசார் அறிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பினர்.

வேதாரண்யத்தை அடுத்த பெரியகுத்தகை ஊராட்சியின் சார்பில் பெரியகுத்தகை பாலம் அருகே ஊராட்சி சார்பில் வெளிநபர்கள் ஊருக்குள் நுழைய தடை என விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. 

Next Story