வெளிநாடுகளில் இருந்து வந்த 605 பேர் தொடர் கண்காணிப்பு - வீட்டு வாசலில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் ஒட்டப்பட்டது


வெளிநாடுகளில் இருந்து வந்த 605 பேர் தொடர் கண்காணிப்பு - வீட்டு வாசலில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் ஒட்டப்பட்டது
x
தினத்தந்தி 25 March 2020 10:15 PM GMT (Updated: 26 March 2020 3:58 AM GMT)

வெளிநாடுகளில் இருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு திரும்பிய 605 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களின் வீட்டு வாசலில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுத்திட தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி 21 நாட்களுக்கு மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் வெளிநாடுகளில் இருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு திரும்பிய 605 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. அவர்கள் எக்காரணம் கொண்டும் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இவர்களின் வீடுகளுக்கு நண்பர்கள், உறவினர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இவர்களின் வீட்டு வாசலில் வெளிநாடுகளில் இருந்து வந்தவரின் பெயர், முகவரி, வீட்டின் உள்ள நபர்களின் எண்ணிக்கை, எத்தனை நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறது என்ற விவரம் கொண்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டன. சுகாதார அலுவலர்கள் தினமும் இவர்களை நேரில் சந்தித்து உரிய சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் குழுவினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். 

Next Story