தர்மபுரி மாவட்டத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து வந்த 69 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்


தர்மபுரி மாவட்டத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து வந்த 69 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
x
தினத்தந்தி 26 March 2020 4:00 AM IST (Updated: 26 March 2020 9:55 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வந்த 69 பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் முன் தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார். கலெக்டர் மலர்விழி, போலீஸ் சூப்பிரண்டு ராஜன், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், அரூர் உதவி கலெக்டர் பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, நலப்பணிகள் இணை இயக்குனர் ஸ்டீபன்ராஜ், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த கூட்டத்தின் முடிவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்திற்கு நேற்று வரை வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மொத்தம் 69 பேர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர் கண்காணிப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 22 பேர் நல்ல நிலையில் உள்ளனர். மற்ற 47 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 19 பேர் சீனாவில் இருந்து வந்தவர்கள். வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வந்தவர்களை கணக்கெடுத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 370 படுக்கை வசதிகளை கொண்ட சிறப்பு பிரிவுகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் படுக்கை வசதிகளுக்கு தேவை ஏற்பட்டால் தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில் 1000 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு பிரிவும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சுயநிதி பொறியியல் கல்லூரியில் 1000 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு பிரிவும் தயார்படுத்தபடும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த கூட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி டீன் சிவக்குமார், அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் டீன் சீனிவாசராஜ், நகராட்சி ஆணையர் சித்ரா, உதவி இயக்குனர்கள் சீனிவாசசேகர், ஜீஜாபாய், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் பூக்கடை ரவி, தர்மபுரி கூட்டுறவு ஒன்றிய துணை தலைவர் பொன்னுவேல் உள்பட மருத்துவத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை பிரிவுகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story