மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது: பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர் - பஸ், லாரி ஓடவில்லை; கடைகள் அடைப்பு


மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது: பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர் - பஸ், லாரி ஓடவில்லை; கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 26 March 2020 10:07 AM IST (Updated: 26 March 2020 10:07 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததை தொடர்ந்து பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஓடாததாலும், கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததாலும் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

நாமக்கல்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதேபோல் தமிழக அரசும் 144 தடை உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் பஸ், லாரி, ஆட்டோ, கார் என எந்த வாகனமும் இயக்கப்படவில்லை. இதனால் தேசிய நெடுஞ்சாலை, பஸ்நிலையங்கள் மற்றும் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

நாமக்கல் நகரை பொறுத்தவரையில் பஸ் நிலையத்தை பேரிகார்டு உதவியுடன் போலீசார் மூடி இருந்தனர். பிரதான சாலை, திருச்சி சாலை, திருச்செங்கோடு சாலை, சேலம் சாலை என நகர் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி கிடந்தன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதியும் ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. ஆங்காங்கே ஒரு சில மருந்து கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. அரசின் உத்தரவுபடி நகர் முழுவதும் மதுபான கடைகளும் மூடப்பட்டு இருந்தன.

லாரி பட்டறைகள், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் பங்குகள், ரே‌‌ஷன்கடைகள், அம்மா உணவகம், வங்கிகள் ஆகியவை திறந்து இருந்தன. இவற்றில் பொதுமக்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. ஓட்டல்களை பொறுத்த வரையில் ஒரு சில ஓட்டல்கள் மட்டுமே திறந்து இருந்தன. அவற்றிலும் பார்சல் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கினர்.

நகர் முழுவதும் போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இவர்கள் இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களிடம் எங்கு செல்கிறீர்கள்? என விசாரித்து அனுப்பி வைத்தனர். தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த இளைஞர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

நாமக்கல்லில் உள்ள உழவர் சந்தை மற்றும் வாரச்சந்தை மூடப்பட்டதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் உழவர் சந்தை அருகே தற்காலிகமாக கடைகளை அமைத்து காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த கடைகளில் காலை வேளையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே இதை தவிர்க்க பூங்கா சாலையில் நகராட்சி அதிகாரிகள் ஒரு கடைக்கு 4 பேர் நின்று வாங்கும் வகையில் கோடு வரைந்து தயார் நிலையில் வைத்து இருந்தனர்.

ராசிபுரத்தில் ஆவின் பாலகம், சிறிய டீக்கடைகள், சிறிய மளிகை கடைகள், காய்கறி கடைகள், மருந்து கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. பஸ் நிலையம், முக்கிய இடங்கள் மற்றும் ஆண்டகளூர்கேட் 4 ரோடு சந்திப்பு பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தன. போலீசார் அனைத்து பகுதிகளிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.இதேபோல குமாரபாளையம், கந்தம்பாளையம் பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவையொட்டி பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடியது.

இதேபோலபள்ளிபாளையம் பகுதியிலும் கடைகள், விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டிருந்தன. சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடின. பாலம் ரோட்டில் ஈரோடு செல்லும் சாலை அடைக்கப்பட்டு ேபாலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவசர வேலைகளுக்காக செல்வோரை மட்டும் போலீசார் விசாரணை நடத்தி அனுமதித்தனர்.

ேமாகனூர் பகுதியிலும் ஊரடங்கு உத்தரவையொட்டி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அணியாபுரம், என்.புதுப்பட்டி, சர்க்கரை ஆலை வண்டிகேட் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. ஒரு சில கடைகள் மட்டும் திறந்து இருந்தன.

Next Story