மாவட்டத்துக்கு வெளிநாடு-மாநிலங்களில் இருந்து வந்த 381 பேர் தீவிர கண்காணிப்பு - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
கரூர் மாவட்டத்துக்கு வெளிநாடு-மாநிலங்களில் இருந்து வந்த 381 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர்,
கரூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அன்பழகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை, நகராட்சி, பேரூராட்சிகள், காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் துறைவாரியாக ஆய்வு செய்தனர். கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், குளித்தலை சப்-கலெக்டர் ஷேக்அப்துல்ரக்மான் அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வர்த்தகர் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த மக்களை எப்படி தனிமைப்படுத்துவது, மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது, அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து துறைவாரியாக அலுவலர்களுடனும், வர்த்தகர் சங்கம், மளிகைபொருட்கள் வியாபாரிகள் சங்கம், பால்வியாபாரிகள் சங்கம், உணவக உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளுக்கு வரக்கூடிய பணியாளர்களுக்கு அடையாள அட்டை கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையில்லாமல் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கக்கூடாது. மருந்துகள், மளிகைப்பொருட்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சைப்பிரிவில் 15 பேர் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருபவர்கள் 381 பேர். இதில், 294 நபர்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள், 87 நபர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள். இவர்களின் வீட்டுக்கதவுகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை யினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நகரப்பகுதி மற்றும் கிராமப்பகுதிகளில் வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களுக்குச்சென்று எவரேனும் வந்திருந்து உரிய மருத்துவப்பரிசோதனை செய்யாமல் இருந்தால்் அவர்கள் குறித்த தகவலை சேகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைக்கு 04324-1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ அல்லது 04324-256306, 04324-255340 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைக்கு 104 என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம்.
இதுவரைக்கும் கரூர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. கரூர் மாவட்டத்தில் போதிய முககவசங்கள், கிருமி நாசினிகள் இருப்பில் உள்ளது. இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி அத்தியாவசியப் பொருட்களை பதுக்குவோர் மீதும், அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 மற்றும் உணவுப்பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story