திருச்சி மத்திய பஸ் நிலையத்தில், பாதாள சாக்கடை அடைப்பு அகற்றும் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு


திருச்சி மத்திய பஸ் நிலையத்தில், பாதாள சாக்கடை அடைப்பு அகற்றும் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு
x
தினத்தந்தி 26 March 2020 10:55 AM IST (Updated: 26 March 2020 10:55 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, பாதாள சாக்கடை அடைப்பு அகற்றும் வாகனம் மூலம் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

திருச்சி,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பொது இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திருச்சி மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மாநகராட்சி சார்பில் நேற்று கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. 144 தடை உத்தரவினால் திருச்சி மத்திய பஸ் நிலையம் நேற்று முன்தினம் இரவில் இருந்தே பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. பஸ்கள் அனைத்தும் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த சூழலை பயன்படுத்தி திருச்சி மத்திய பஸ் நிலையத்தின் அனைத்து நடைமேடைகள், பயணிகள் அமருவதற்கான இருக்கைகள், பயணிகள் ஓய்வெடுப்பதற்கான அறைகள், அரசு போக்குவரத்து கழகங்களின் முன்பதிவு மையங்கள், நேரக்காப்பாளர் அறைகள், மாநகராட்சி அலுவலக அறைகள், கழிவறைகள் ஆகிய அனைத்து இடங்களிலும் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதற்காக பாதாள சாக்கடை அடைப்பு அகற்றும் வாகனம் ஒன்று வரவழைக்கப்பட்டது. அந்த வாகனத்தில் உள்ள டேங்கரில் 5 ஆயிரம் லிட்டர் கிருமி நாசினி நிரப்பப்பட்டது. பின்னர் மின்சார மோட்டார் கருவிகள் மூலம் கிருமி நாசினி மத்திய பஸ் நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் தெளிக்கப்பட்டது. மேலும், சுகாதார பணியாளர்கள் கையில் வைத்து இயக்கும் சிறிய அளவிலான கருவி மூலமும் கிருமி நாசினி தெளித்தார்கள். இந்த பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், மாநகராட்சி சுகாதார அதிகாரி ஜெகநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Next Story