மாவட்ட செய்திகள்

கடுமையான கெடுபிடிகளால் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்தது + "||" + With severe spoilage People walk down the road

கடுமையான கெடுபிடிகளால் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்தது

கடுமையான கெடுபிடிகளால் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைந்தது
கடுமையான கெடுபிடிகளால் புதுவை சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது.
புதுச்சேரி,

கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதுவையில் 144 தடை உத்தரவு முதலில் பிறப்பிக்கப்பட்டது. அப்போது மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் அது ஊரடங்கு உத்தரவாக மாற்றப்பட்டது.

ஆனால் புதுவை அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவினை பெரும்பாலானவர்கள் பின்பற்றவில்லை. கட்டுப்பாடுகளை மீறி அத்தியாவசிய பொருட்கள் வாங்கப் போவது போல் இருசக்கர வாகனங்களில் நகர வீதிகளில் பலர் உலா வந்தனர். அவர்களை தடுத்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நகரப்பகுதியில் தேவையில்லாமல் சுற்றி திரிந்த சுமார் 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்த பிரதமர் மோடி உத்தரவிட்டார். இதனை கடுமையாக கடைபிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவினை தொடர்ந்து புதுவை எல்லைகள் மூடப்பட்டு தமிழக பகுதிகளில் இருந்து வந்தவர்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். புதுவை நகரப்பகுதியிலும் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து போலீசார் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

இதனால் அவசியமின்றி சாலைகளில் திரிபவர்களின் எண்ணிக்கை நேற்று கட்டுப் படுத்தப்பட்டது. போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை முறையாக கவனித்து அனுப்பினார்கள்.

அதேநேரத்தில் மளிகை, காய்கறி கடைகள் இயங்கின. காலையில் கலெக்டர் அருண், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அல்வால், துணை கலெக்டர் சுதாகர் ஆகியோர் உழவர்சந்தை, பஸ் நிலைய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோல் போலீஸ் ஐ.ஜி. சுரேந்திரசிங் யாதவும் ரோந்து வந்து கண்காணித்தார்.

மாநிலத்தின் தெற்கு எல்லையான முள்ளோடை நுழைவு வாயில் மூடப்பட்டு உள்ளது. இங்கு கடலூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தவும், அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை கண்காணிக்கவும் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன், போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர்கள் தன சேகரன், பாபுஜி, அனில்குமார் மற்றும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருத்துவமனை செல்லும் வாகனங்கள், அத்தியாவசிய தேவைக் காக செல்லும் வாகனங்கள் மட்டுமே புதுவைக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன. மற்ற வாகனங்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் முள்ளோடை நுழைவுவாயிலில் போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். புதுச்சேரியில் இருந்து காரில் சென்ற அவர், போலீசாரின் கண்காணிப்பு பணி குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர், பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பாதுகாப்பு மிகவும் அவசியம் என்றார்.

இதன்பின்னர் அவர் பாகூர், நெட்டப்பாக்கம் பகுதிகளுக்கு சென்று, ஊரடங்கு உத்தரவு எந்த நிலையில் உள்ளது என்று ஆய்வு செய்தார். அவருடன் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங் ஆகியோர் உடனிருந்தனர்.