மக்களை அடித்து துன்புறுத்த கூடாது: வீட்டை விட்டு வெளியே வந்தால் வாகனங்களை பறிமுதல் செய்யலாம் - ‘வாக்கி டாக்கி’யில் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்களை அடித்து துன்புறுத்த கூடாது. வாகனங்களை பறிமுதல் செய்யலாம் என்று போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் வாக்கி டாக்கி மூலம் அறிவுறுத்தி உள்ளார்.
கோவை,
கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதை மீறி ஏராளமானவர்கள் சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித்திரிகிறார்கள். இதை கண்காணிக்க கோவை மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கோவை சிங்காநல்லூர், பொள்ளாச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் வீட்டைவிட்டு வெளியே வந்த வாகன ஓட்டிகளை போலீசார் லத்தியால் அடித்து துன்புறுத்தினர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் மக்களை அடித்து துன்புறுத்த கூடாது என்றும், வீட்டைவிட்டு வெளியே வந்தால் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யலாம் என்றும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ‘வாக்கி டாக்கி’ மூலம் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
கோவை மாவட்டத்தில் நேற்று தடையை மீறி வாகனம் ஓட்டி வந்தவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அத்துடன் சரியான காரணத்தை சொன்னவர்களை போலீசார் அனுப்பிவிட்டனர். முன்னுக்குப்பின் முரணாக பேசியவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்குப்போட்டனர். மேலும் ஒருசிலர் கைதுசெய்யப்பட்டனர். அதில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 134 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். அதுபோன்று 104 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story