கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு மக்கள் தனித்து இருந்து ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வேண்டுகோள்


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு மக்கள் தனித்து இருந்து ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வேண்டுகோள்
x
தினத்தந்தி 27 March 2020 4:30 AM IST (Updated: 26 March 2020 11:40 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு மக்கள் தனித்து இருந்து ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ வேண்டுகோள் விடுத்தார்.

கயத்தாறு, 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, முக கவசம், கை கழுவும் திரவம், கிருமிநாசினி போன்றவற்றின் தேவை அதிகரித்து உள்ளது. இதையடுத்து மகளிர் சுயஉதவிக்குழுக்களின் சார்பில், முக கவசம், கை கழுவும் திரவம், கிருமிநாசினி போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு, மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடம்பூர், கயத்தாறு, கழுகுமலை ஆகிய இடங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் சார்பில் தயாரிக்கப்பட்ட முக கவசம், கை கழுவும் திரவம், கிருமிநாசினி போன்றவற்றின் விற்பனையை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலகில் உள்ள 195 நாடுகளில் 186 நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகள் முடங்குகின்ற நிலையில் உள்ளது. நமது நாட்டில் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்துகின்ற நிலையில் உள்ளோம். தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிக்காத வகையில் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு அனைவரும் தனித்து இருந்து அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை. மாவட்டத்தில் உள்ள 41 வருவாய் வட்டங்களில் சுசுாதார துறையினர், வருவாய் துறையினர், உள்ளாட்சி துறையினர், காவல் துறையினர் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். இவர்கள், சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த சீனா உள்ளிட்ட வெளிநாட்டு கப்பல்கள் 15 கடல்மைல் தொலைவுக்கு அப்பால் நிறுத்தப்பட்டு உள்ளது.

முக கவசம், கை கழுவும் திரவம், கிருமி நாசினி போன்றவை தட்டுப்பாடின்றி வழங்கும் வகையில், அவற்றை தூத்துக்குடி மாவட்டத்தில் 15 நகரங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றோம்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், மகளிர் திட்ட இயக்குனர் ரேவதி, நகர பஞ்சாயத்து செயல் அலுவலர்கள் ஜோதிபாசு, மாதவன், முருகன், முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் நாகராஜா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story