கர்நாடகத்தில் கொரோனா பலி 2 ஆக உயர்வு - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53 ஆனது
கர்நாடகத்தில் சிக்பள்ளாப்பூர் மூதாட்டி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53 ஆனது.
பெங்களூரு,
சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் அங்கு பல உயிர்களை காவு வாங்கியது. தற்போது இந்த கொரோனா வைரஸ் இத்தாலி, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கோரதாண்டவமாடி வருகிறது. இந்த வைரசின் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் உயர்ந்து வருகிறது. கர்நாடகத்திலும் கலபுரகியை சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுபோல கர்நாடகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசுக்கு கடந்த 24-ந் தேதி வரை 40 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். 25-ந் தேதி மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது ஆய்வக அறிக்கை மூலம் தெரிந்தது. இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி சவுதி அரேபியாவுக்கு சென்று விட்டு பெங்களூரு வந்தார். அவருக்கு உடல்தகுதி சோதனை நடத்திய போது கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது தெரியவந்தது. இதனால் அந்த மூதாட்டி பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 24-ந் தேதி அந்த மூதாட்டி உயிரிழந்தார். அந்த மூதாட்டியின் ரத்த பரிசோதனை அறிக்கையில் அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் கர்நாடகத்தில் கொரோனா வைரசுக்கு சாவு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. அந்த மூதாட்டியின் உடல் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி தகனம் செய்யப்பட்டது.
இதுபோல கடந்த 25-ந் தேதி மாலையில் இருந்து 26-ந் தேதி(அதாவது நேற்று) காலை 8 மணி வரை 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்த நோய் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்தது.
பாதிக்கப்பட்ட 3 பேரில் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவை சேர்ந்த 35 வயது நிரம்பியவரும் ஒருவர். இவர் சுகாதாரத்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை. இவர் மைசூருவில் உள்ள ஆஸ்பத்திரியில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவருடன் யார், யார் தொடர்பில் இருந்தனர் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக அவருடன் 7 பேர் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம்.
இதுபோல ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த 64 வயது நபர் பிரான்ஸ் நாட்டுக்கு சென்று விட்டு கடந்த 25-ந் தேதி பெங்களூருவுக்கு திரும்பினார். இவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
இதுபோல பெங்களூருவை சேர்ந்த 45 வயது நபர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட உறவினருடன் தொடர்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக அரசு தொலை மருத்துவ ஆலோசனையை பின்பற்ற அனுமதி அளித்து உள்ளது. மும்பையில் இருந்து மங்களூருவுக்கு கடந்த 17-ந் தேதி கொரோனா வைரஸ் பாதித்த ஒருவர் பயணம் செய்து உள்ளார். அவர் கடந்த 18-ந் தேதி பட்கல் வந்து உள்ளார். அவருடன் ரெயிலில் பயணம் செய்தவர்கள் 08046848600 அல்லது 08066692000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் தொடர்பாக புதிதாக ஒரு செல்போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.www.karnataka.gov.inஎன்ற இணையதள முகவரியில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலில் கொரோனா வைரஸ் பாதித்த நபர்கள் எந்த நாட்டில் இருந்து வந்தனர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பான முழு விவரம் பற்றி அதில் இடம் பெற்று இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story