ஊரடங்கு உத்தரவை மீறிய 50 வியாபாரிகள் மீது வழக்கு - 6 ஆட்டோக்கள் பறிமுதல்
மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி கடைகளை திறந்த 50 வியாபாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆண்டிப்பட்டி,
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசியமான கடைகள் மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் திறந்து வைத்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் ஆண்டிப்பட்டி நகரில் செயல்படும் சில கடைகளில் அரசின் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தவில்லை என்று புகார் எழுந்தது.
இதனையடுத்து ஆண்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணதெய்வேந்திரன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆண்டிப்பட்டியில் திறந்திருந்த கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய பொருட் களை தவிர மற்ற பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. ஊரடங்கு உத்தரவை மீறி கடைகளை திறந்த 50 வியாபாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் மீண்டும் கடைகளை திறந்தால் ‘சீல்’ வைக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர்.
தேனி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அல்லிநகரம் பஸ் நிறுத்தம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று பேசி கொண்டிருந்த அல்லிநகரத்தை சேர்ந்த இளையராஜா (வயது 28), காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்த முருகன் (55), அண்ணாநகர் 1-வது தெருவை சேர்ந்த விக்னேஷ்வரன் (25) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் கூடலூரில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றித்திரிந்த கூடலூரை சேர்ந்த சாந்தனு (22), பகவதிராஜ் (29), சுந்தரேசன் (30) உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரியகுளத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சென்ற பெரியகுளம், தென்கரை பகுதியை சேர்ந்த பாலமுருகன் (27), காஜாமைதீன் (47), கனிஷ்கர் (22), சுப்பிரமணி (26) உள்பட 10 பேர் மீது பெரியகுளம் மற்றும் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், சிலர் இந்த தடை உத்தரவை மீறி ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றிச் செல்வதாக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவுக்கு புகார்கள் சென்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வட்டார போக்குவரத்து அலுவலர் களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்பேரில், தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் தர்மானந்தம் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முகமது மீரான், அருண்குமார் ஆகியோர் தேனி, கம்பம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் நின்று சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக பயணிகளை நெருக்கமாக அமர வைத்து இயக்கப்பட்ட ஆட்டோக்களை அவர்கள் மடக்கிப் பிடித்தனர். தடை உத்தரவை மீறியதாக மொத்தம் 6 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். இதுபோன்று தடை உத்தரவை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் தர்மானந்தம் எச்சரித்துள்ளார்.
Related Tags :
Next Story