கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - பிரதமர் மோடிக்கு டி.கே.சிவக்குமார் கோரிக்கை
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி அனைத்து கட்சிக்கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் பல பகுதிகளில் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் எனக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் பற்றி தகவல் கொடுத்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மக்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்று மாநில அரசு கூறியுள்ளது.
இதுபற்றி நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. சாலையில் நடந்து செல்பவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டுகிறார்கள். இதனை நான் டி.வி.யில் பார்த்தேன். அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் என்று தெரியவில்லை. இதை மாநில அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ்.கொள்கை பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை. அந்த அமைப்பை சேர்ந்த சிலர் 5 கிலோ அரிசி, உப்பு, சமையல் எண்ணெய் கொடுக்கிறோம் என்று வாகனங்களில் சுற்றி வருகிறார்கள். இதற்கு முதல்-மந்திரி எடியூரப்பா அனுமதி கொடுத்தாரா? ஆர்.எஸ்.எஸ்.அமைப்பை சேர்ந்தவர்கள் மக்களிடையே விளம்பரம் தேட முயற்சி செய்கின்றனர். நாங்கள் அனைவரும் மக்களுக்கு சேவையாற்ற தயாராக உள்ளோம். கொரோனா வைரஸ் உலகளாவிய பிரச்சினை. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம்.
கொேரானா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மாநில அரசு திடமான நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்கவில்லை. மருத்துவ கல்வி மந்திரி சுதாகர், சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு இடையே குழப்பம் உள்ளது. 2 பேரும் மாறி, மாறி கருத்துகளை கூறி வருகிறார்கள். இது கட்சி பிரச்சினையா? அல்லது ஆட்சியில் உள்ள பிரச்சினையா என்று தெரியவில்லை.
யாருக்காவது பேச தொலைபேசியில் அழைத்தால் இருமலுடன் தொடங்குகிறது. அதை கேட்டவுடன் நமக்கு இருமல் வருவது போல உள்ளது. எல்லை, நீர், நிலம், மொழி பிரச்சினைகள் வரும் போது அனைத்துக்கட்சியினரை அழைத்து ஆலோசனை நடத்துவது வழக்கமான ஒன்று. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய, கர்நாடக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி எதிர்க்கட்சி தலைவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.
நகரங்களில் இருந்தவர்கள் கொரோனா பீதியால் தற்போது கிராமங்களுக்கு சென்று விட்டனர். அங்கேயும் கொரோனா பரவும் நிலை உள்ளது. அரசு இன்னும் சுறுசுறுப்பாக செயல்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story