கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை - மாநில அரசுக்கு, சித்தராமையா வேண்டுகோள்
கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு, சித்தராமையா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் இதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இதனால் தொழிலாளிகள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் உள்பட பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு இன்று(அதாவது நேற்று) சில உதவி திட்டங்களை அறிவித்து உள்ளது. இது மிகவும் தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு. உதவி தொகையும் மிகவும் குறைவானது.
நமது நாட்டில் கொரோனா வைரஸ் கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. ராகுல் காந்தி கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்றும், முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை கேட்டு கொண்டார். அவ்வாறு இருந்தும் நிலைமையின் தீவிரத்தை மத்திய அரசு புரிந்து கொள்ளாமல் அலட்சியமாக நடந்ததால் தான் இன்று வைரஸ் இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு அறிவித்து உள்ள உதவி திட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சிறு வியாபாரிகள், ஆட்டோ, வாடகை கார் ஓட்டுனர்கள் வங்கிகளில் இருந்து கடன் பெற்று உள்ளனர். நாடு முழுவதும் முடக்கப்பட்டு உள்ளதால் அவர்கள் வருமானத்தை இழந்து உள்ளனர்.
அதனால் அவர்கள் வங்கியில் வாங்கிய கடனில் 50 சதவீதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். அவர்களின் 3 மாத கடன் தவணை ஒத்திவைக்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்கள் வாழ்க்கை மிக மோசமாக உள்ளது. இதனை கவனித்து தொழிலாளர் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டோ, வாடகை கார்கள், தனியார் பஸ் ஓட்டுனர்கள், ஓட்டல், உணவகங்கள், திரைப்பட துறை ஊழியர்கள், உணவு வினியோகம் செய்பவர்கள் வேலை இல்லாமல் கஷ்டத்தில் உள்ளனர்.
ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனம் மூடப்பட்டு உள்ளது அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பெண்கள் வங்கிக்கணக்கில் தலா ரூ.500 வீதம் 3 தவணைகளில் ரூ.1,500 வழங்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த உதவியை ஆண்களுக்கும் கொடுக்க வேண்டும். இந்த உதவி தொகையை ரூ.3 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்.
கிஷன் சம்மன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை அதிகரிக்க வேண்டும். உணவு உள்ளிட்ட சரக்கு சேவை வரியை 50 சதவீதமாக குறைக்க வேண்டும். கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வெளியூர்களில் இருந்து பெங்களூருவுக்கு வந்த மக்கள் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு உணவு, தங்கும் வசதிகளை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, ஹாசன், சிவமொக்காவில் மட்டும் கொரோனா வைரஸ் ஆய்வகம் உள்ளது. பல்லாரி, கலபுரகியில் சளியை சேகரிக்கும் ஆய்வகம் உள்ளது. இது போதாது. நிலைமை மோசம் ஆனால் அரசு என்ன செய்ய போகிறது. 2 அல்லது 3 மாவட்டங்களுக்கு ஒரு கொரோனா வைரஸ் ஆய்வகம் தொடங்க வேண்டும். பரிசோதனை உபகரணங்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சரியான அளவில் தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் பரிசோதனை கருவிகளை அதிகளவில் மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும்.
எல்லா மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை வழங்க தனியாக மையங்கள் தொடங்க வேண்டும். கொரோனா வைரசுக்கு எதிராக அனைவரும் ஒற்றுமையாக போராட வேண்டும்.
கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் பின்பற்றுகிறார்கள். இந்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவ கல்லூரி மற்றும் நர்சிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை இந்த கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தி கொள்ள வேண்டும். சாமானிய மக்கள் நலனை கருத்தில் கொண்டு கேரள அரசு எடுத்தது போன்ற சில முக்கிய நடவடிக்கைகளை, கர்நாடக அரசும் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story