கர்நாடகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு; ஊரடங்கை மீறுபவர்கள் கைது - முதல்-மந்திரி எடியூரப்பா அதிரடி உத்தரவு


கர்நாடகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு; ஊரடங்கை மீறுபவர்கள் கைது - முதல்-மந்திரி எடியூரப்பா அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 27 March 2020 12:00 AM GMT (Updated: 26 March 2020 7:27 PM GMT)

கர்நாடகத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு, முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டு உள்ளார்.

பெங்களூரு, 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுபோல் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கர்நாடகத்தில் கொரோனாவுக்கு கலபுரகியை சேர்ந்த முதியவரும், சிக்பள்ளாப்பூரை சேர்ந்த மூதாட்டியும் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. அதே வேளையில் கர்நாடகத்தில் இதுவரை 53 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கர்நாடகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்று கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

நூதன தண்டனை

இருப்பினும் ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல் சிலர் கூட்டமாக ரோடுகளில் சுற்றித்திரிவது, வாகனங்களில் செல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு சுற்றித்திரிபவர்களை போலீசார் நூதன தண்டனைகள் வழங்கி வீட்டுக்கு திரும்பி வருகிறார்கள். அதாவது தோப்புக்கரணம் போடுதல், குப்பை கழிவுகளை அள்ளுதல் போன்ற தண்டனை வழங்கப்படுகிறது. மேலும் சிலரை போலீசார் தடியால் அடித்தும் எச்சரிக்கை செய்து வருகிறார்கள்.

அதுபோல் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களை 14 நாட்கள் கட்டாயம் வீட்டில் தனிமையில் இருக்கவும் சுகாதாரத் துறையினர் ைககளில் அழியாத முத்திரை பதிவிட்டுள்ளனர். அதை மீறி வெளியே நடமாடினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் கர்நாடக அரசு எச்சரித்துள்ளது.

எடியூரப்பா அதிரடி உத்தரவு

இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூரு பாலபுரி பவனில் இருந்தபடி நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கலெக்டர்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார்.

அதன்விவரம் வருமாறு:-

* ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே நடமாடுபவர்களை கைது செய்ய வேண்டும்.

* அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட வேண்டும்

* எக்காரணம் கொண்டும் வாகனங்களை அனுமதிக்க கூடாது.

* கேரளாவில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

* சானிடைசர் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆலாசனை நடத்தப்பட்டது. சில நிறுவனங்கள் சானிடைசரை இலவசமாக வழங்க முன்வந்து உள்ளன. இதனை அதிகாரிகள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

50 படுக்கைகளுடன் தனி வார்டு

* எந்த பிரச்சினை இருந்தாலும் உடனடியாக தலைமை செயலாளர் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.

* மாநிலத்தில் தனியார் மருத்துவ மையங்களை மூட கூடாது. யாராவது அதை மூட முயற்சி செய்தால் அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தினசரி பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பது குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட தனிவார்டு அமைத்து தயார் நிலையில் வைக்க வேண்டும்.

உரங்கள் கிடைக்க நடவடிக்கை

* டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு யாராவது தொந்தரவு கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* வங்கி கடன் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கிய கடனை வசூல் செய்வதை ஒத்தி வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* விவசாயிகளுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் கிருமிநாசினி மருந்துகள், உரங்கள் உள்ளிட்டவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அனைத்து மாவட்ட கலெக்டர்களின் வங்கி கணக்கில் போதுமான நிதி இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. தேவைக்கு ஏற்ப அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

* பொதுமக்களுக்கு வீடுகளுக்கே சென்று பொருட்கள் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் பொதுமக்கள் வெளியே செல்வதை தடுக்க முடியும்.

கட்டுப்பாட்டில் உள்ளது

* பொதுமக்கள் கூட்டமாக சேர்வதை முடிந்தவரை தடுக்க வேண்டும்.

* கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்பாட்டில் உள்ளது. அதிகாரிகள், டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள், இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* அனைத்து மாவட்ட கலெக்டர்களும் மருத்துவ கல்லூரிகளின் உதவியை பெற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர்களுக்கு எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

துணை முதல்-மந்திரிகள்

இந்த ஆலோசனையில் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், துணை முதல்-மந்திரிகள் லட்சுமண் சவதி, அஸ்வத் நாராயண், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, பள்ளிகல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், மருத்துவ கல்வி துறை மந்திரி சுதாகர், சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜாவித் அக்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story