ஆதரவற்றவர்களுக்கு தினமும் இலவச உணவு - எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


ஆதரவற்றவர்களுக்கு தினமும் இலவச உணவு - எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 March 2020 8:30 PM GMT (Updated: 26 March 2020 7:29 PM GMT)

பரமக்குடியில் ஆதரவற்றவர்களுக்கு தினமும் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் பணியை சதன் பிரபாகர் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

பரமக்குடி, 

கொரோனா வைரஸ் எதிரொலியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதையடுத்து பரமக்குடியில் பொதுமக்கள் சிரமமின்றி காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கும் வகையில் வாரச்சந்தை வளாகத்தில் உள்ள மினி விளையாட்டு மைதானம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், எமனேசுவரம் சவுராஷ்டிரா பள்ளி வளாகம் ஆகியவற்றில் தற்காலிக கடைகள் அமைக்கப்படுகின்றன.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் காலை நேரம் மட்டுமே வாங்கிக்கொள்ளும் வகையில் இது அமைக்கப்படும். இதனை பரமக்குடி எம்.எல்.ஏ. சதன்பிரபாகர், ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ. முனியசாமி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு நகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர்.

பின்பு பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆதரவற்றோருக்கு அம்மா உணவகம் மூலம் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளும் இலவசமாக உணவு வழங்குவதை எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் ஆகியோர் தொடங்கி வைத்த னர். தொடர்ந்து பரமக்குடி பஸ் நிலையத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை நேரில் ஆய்வு செய்தார். அவர்களுடன் ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், ஓவியர் சரவணன் ஆகியோர் உடன் சென்றனர்.

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மளிகை பொருட்கள் தேவைப்பட்டால் எனது செல்போனில் தொடர்பு கொள்ளவும். அவர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story