பவானி அரசு ஆஸ்பத்திரி ரூ.1½ கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்படும் - அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்
பவானி அரசு ஆஸ்பத்திரி ரூ.1½ கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.
பவானி,
கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பவானி பகுதியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆய்வு மேற்கொண்டார். பவானியில் உள்ள அம்மா உணவகத்துக்கு சென்ற அமைச்சர் அங்கு உணவு சுகாதாரமாக சமைத்து வைக்கப்பட்டு உள்ளதா? என ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து தினசரி மார்க்கெட்டுக்கு சென்ற அவர் வியாபாரிகளிடம் காய்கறிகள் தடையின்றி கிடைக்கிறதா? என கேட்டறிந்தார். அப்போது சில வியாபாரிகள் முக கவசம் அணியாமல் இருந்தனர். உடனே அவர்களுக்கு தான் கொண்டு வந்திருந்த முக கவசங்களை வழங்கினார். மேலும் கெட்டுப்போன காய்கறிகளை விற்க வேண்டாம் எனவும், அதிக விலைக்கு காய்கறிகளை விற்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அமைச்சர் கே.சி.கருப்பணன், அங்கிருந்த டாக்டர்களிடம் ஆஸ்பத்திரியில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டார். அப்போது ஆஸ்பத்திரியில் மருந்து, மாத்திரைகள் வைக்கும் குளிர்சாதன பெட்டி பழுதாகி விட்டது என டாக்டர்கள் தெரிவித்தனர். உடனே அமைச்சர் புது குளிர்சாதன பெட்டி மற்றும் உள் நோயாளிகளுக்கு உணவு சமைக்க மிக்சியையும் வாங்கி ஆஸ்பத்திரிக்கு வழங்கினார். மேலும் அவர் டாக்டர்களிடம் கூறுகையில், ‘பவானி அரசு ஆஸ்பத்திரி ரூ.1½ கோடி மதிப்பில் அவசர சிகிச்சை பிரிவுடன் தரம் உயர்தப்பட உள்ளது,’ என்றார்.
பின்னர் தாலுகா அலுவலகத்துக்கு வந்த அமைச்சர் கே.சி.கருப்பணன், தாசில்தார் பெரியசாமியிடம், ‘பவானி தாலுகாவுக்கு உள்பட்ட பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் எத்தனை பேர்? வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் எத்தனை பேர். அவர்கள் முறையாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்களா?,’ என கேட்டறிந்தார். அதுமட்டுமின்றி நகராட்சி பொறியாளர் கதிர்வேலுவை அழைத்து, ‘பவானி நகரில் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். பொதுமக்கள் கூடும் தினசரி மார்க்கெட், அரசு ஆஸ்பத்திரி ஆகிய இடங்களில் காலை, மாலை என 2 வேளையும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்,’ என உத்தரவிட்டார்.
ஆய்வின் போது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் உடனிருந்தார்.
Related Tags :
Next Story