ஏரியில் மூழ்கி 3 சிறுமிகள் பலி - 2 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
ஏரியில் மூழ்கி 3 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்த்தனர்.
சென்னை,
திருவள்ளூரை அடுத்த கூடப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி குமாரி. இவர்களுடைய மகள்கள் ஐஸ்வர்யா(வயது 16) மற்றும் சங்கீதா(20). இவர்களது வீட்டுக்கு உறவினரான சென்னையை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது மகள் பிரியதர்ஷினி(15) வந்து இருந்தார். குமாரி நேற்று தனது மகள்கள் ஐஸ்வர்யா, சங்கீதா மற்றும் பிரியதர்ஷினி, மேலும் அதே பகுதியைச் சேர்ந்த சவுமியா(16), சந்தியா(17) ஆகியோருடன் கூடப்பாக்கம் அடுத்த நேமம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றார்.
ஏரியின் கலங்கள் பகுதியில் குமாரி உள்பட 6 பேரும் குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக குமாரியை தவிர மற்ற 5 பேரும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதால் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த குமாரி கூச்சலிட்டார். உடனே அருகில் விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்கள் ஓடிவந்து நீரில் மூழ்கிய 5 பேரையும் மீட்டனர்.
இதில் சவுமியா, சந்தியா, பிரியதர்ஷினி ஆகிய 3 சிறுமிகளும் நீரில் மூழ்கியதில் பரிதாபமாக இறந்தனர். ஐஸ்வர்யா மற்றும் சங்கீதா ஆகியோர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சங்கீதா மட்டும் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. அதையும் மீறி ஏரியில் குளிக்க சென்ற 3 சிறுமிகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story