அழகான பெண்களை சந்திக்க வைப்பதாக கூறி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரிடம் ரூ.11¾ லட்சம் மோசடி - வலைத்தள கும்பலுக்கு வலைவீச்சு


அழகான பெண்களை சந்திக்க வைப்பதாக கூறி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரிடம் ரூ.11¾ லட்சம் மோசடி - வலைத்தள கும்பலுக்கு வலைவீச்சு
x

அழகான பெண்களை சந்திக்க வைப்பதாக கூறி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரிடம் ரூ.11¾ லட்சம் மோசடியில் ஈடுபட்ட வலைத்தள கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை,

மும்பை மஜ்காவ் டக்யார்டு பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் முகநூல் மூலமாக ‘மேக் மை பிரண்டு ' என்ற வலைத்தள பக்கத்தை பற்றி தெரிந்து கொண்டார். அந்த பக்கத்தில் பெயரை பதிவு செய்தால் அழகான பெண்களுடன் நெருங்கி பழகலாம் என கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து பாதுகாப்பு படை வீரர் அந்த பக்கத்தில் அவரது பெயர், செல்போன் எண் போன்ற சுய விவரங்களை கொடுத்தார். இந்தநிலையில் மறுநாள் ஆரோகி என்ற பெண் பாதுகாப்பு படை வீரரை தொடர்பு கொண்டு பேசினார். அவர் ‘மேக் மை பிரண்டு' பக்கத்தில் உறுப்பினராக ரூ.920 கட்டணமாக செலுத்த வேண்டும் என கூறினார். அதன்படி பாதுகாப்பு படை வீரர் அந்த கட்டணத்தை செலுத்தினார்.

அதன்பிறகு தியா என்ற பெண், பாதுகாப்பு படை வீரரை தொடர்பு கொண்டார். அவர், ‘மேக் மை பிரண்டு' பக்கத்தில் பல அழகானபெண்கள் பெயர்களை பதிவு செய்து உள்ளனர். அவர்களை சந்திக்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றால் ரூ.20 ஆயிரத்து 500 சேவை கட்டணமாக செலுத்துமாறு கூறினார். பாதுகாப்பு படை வீரரும் அந்த பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தினார். அதன்பிறகு தியா சில பெண்களின் படத்தை பாதுகாப்பு படை வீராின் வாட்ஸ்அப்புக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் அதில் ஒரு பெண்ணை தேர்வு செய்யுமாறு கூறினார். பாதுகாப்பு படை வீரரும் ஒருபெண்ணை தேர்வு செய்தார். இதையடுத்து தியா, பாதுகாப்பு படை வீரர் தேர்வு செய்த பெண்ணின் பெயர் நேகா சர்மா எனக்கூறி அவரது செல்போன் எண்ணையும் கொடுத்தார்.

இதையடுத்து அவர் நேகா சர்மாவை தொடர்பு கொண்டார். இதில் நேகா சர்மாவும் பல்வேறு காரணங்களை கூறி பாதுகாப்பு படை வீரரிடம் பணத்தை கறந்தார். பாதுகாப்பு படை வீரரும் நேகா சர்மா மற்றும் பல பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம் என்ற ஆசையில் கேட்ட பணத்தை அனுப்பி வைத்தார். 17 நாட்களில் அந்த கும்பல் பாதுகாப்பு படை வீரரிடம் ரூ.11¾ லட்சத்தை பறித்தது. எனினும் அந்த கும்பலை சேர்ந்த யாரும் கடைசி வரை பாதுகாப்பு படை வீரரை சந்திக்க வரவில்லை.

இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் மோசடி குறித்து சிவ்ரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரை வலைத்தளத்தின் மூலம் நூதன முறையில் ஏமாற்றிய கும்பலை தேடி வருகின்றனர்.

Next Story