ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித்திரிந்தவர்களை வீட்டிலேயே இருப்போம் என உறுதிமொழி எடுக்க வைத்த போலீசார்


ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித்திரிந்தவர்களை வீட்டிலேயே இருப்போம் என உறுதிமொழி எடுக்க வைத்த போலீசார்
x
தினத்தந்தி 27 March 2020 3:45 AM IST (Updated: 27 March 2020 8:03 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றித்திரிந்தவர்களை ‘வீட்டிலேயே இருப்போம்’ என போலீசார் உறுதிமொழி எடுக்க வைத்தனர்.

விருத்தாசலம்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மற்றும் தமிழகத்தில் 144 தடை பிறப்பிக்கப்பட்டு, அமலில் இருந்து வருகிறது. இந்த தடை உத்தரவை மீறி வாகனங்களில் செல்பவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கி, வீடுகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

இருப்பினும் பலர் தடை உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றித்திரிகின்றனர். அந்த வகையில் நேற்று விருத்தாசலம் பாலக்கரை வழியாக பலர் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தனர்.

அப்போது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமஜெயன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு நிற்க வைத்து, அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வருவோம். மற்ற நேரங்களில் வீட்டுக்குள்ளேயே இருப்போம் என உறுதிமொழி எடுக்க போலீசார் வலியுறுத்தினர். அதன்படி வாகன ஓட்டிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அப்போது அந்த வழியாக மருத்துவ பணிக்காக சென்ற டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோர் மூலம் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா வைரஸ் பற்றியும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதேபோல் விருத்தாசலம் மார்க்கெட் பகுதியில் பலர் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். இதைபார்த்த சப்-கலெக்டர் பிரவின்குமார், தடை உத்தரவை மீறி வாகனங்களில் சென்றவர்களை தடுத்து நிறுத்தினார். பின்னர் அவர்கள் வந்த வாகனங்களின் டயர்களில் காற்றை திறந்து விட்டார். மீண்டும் தேவையில்லாமல் சாலையில் சுற்றித்திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்து, அங்கிருந்து வாகன ஓட்டிகளை சப்-கலெக்டர் பிரவின்குமார் அனுப்பி வைத்தார்.

Next Story