144 தடை உத்தரவை மீறி சாலையில் வந்த 3 கார்கள், 50 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் - போலீசார் நடவடிக்கை


144 தடை உத்தரவை மீறி சாலையில் வந்த 3 கார்கள், 50 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் - போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 27 March 2020 4:00 AM IST (Updated: 27 March 2020 8:03 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவை மீறி சாலையில் வந்த 3 கார்கள், 50 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆனால் 144 தடை உத்தரவை மீறி கள்ளக்குறிச்சியில் சாலைகளில் அதிக எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் சென்றன. இதனால் போலீசார் ஒலி பெருக்கி மூலம் அவர்களை எச்சரித்தனர். உங்கள் உயிரை காப்பாற்ற உங்கள் குடும்ப நலனுக்காக வெளியில் வராமல் வீட்டிலேயே இருங்கள். பொதுமக்களாகிய நீங்கள் நினைத்தால் ஜல்லிக்கட்டு விளையாட்டை வென்றெடுத்தது போல் கொரோனா வைரசையும் தடுக்க முடியும் என அறிவுரை கூறினார்கள். ஆனால் போலீசார் கூறிய அறிவுரையை பொருட்படுத்தாமல் சாலைகளில் அதிக எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்கள், கார்கள் வந்து கொண்டிருந்தன.

இதனால் கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையில் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு சாலையில் போலீசார் 144 தடை உத்தரவை மீறி வந்த 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

அதேபோல் 144 தடை உத்தரவை மீறி சாலைகளில் வந்த 3 கார்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து காவல் நிலையத்துக்கு எடுத்துச்சென்றனர். இது மட்டுமில்லாமல் குடும்பத்துடன் வந்தவர்களை கண்டித்து அனுப்பினார்கள்.

இதே போல் சின்னசேலத்தில் 144 தடை உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, தோப்புக்கரணம் போட வைத்து எச்சரித்து அனுப்பினார்கள்.

Next Story