பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை: தம்பதி உள்பட 5 பேர் கைது


பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை: தம்பதி உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 26 March 2020 9:45 PM GMT (Updated: 27 March 2020 2:33 AM GMT)

வேடசந்தூர் அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த தம்பதி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே நாகோணானூரில் பெட்டிக்கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் நேற்று நாககோணானூரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த செல்லப்பன் (வயது 50) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, தனது பெட்டிக்கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து செல்லப்பன் மீது வழக்குப்பதிந்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் 750 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் நத்தம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சேர்வீடு பகுதியில் சிந்தம்மாள் (45) என்பவரும், நத்தம் தர்பார்நகர் பகுதியில் கனகராஜ் (27) என்பவரும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிந்தம்மாள், கனகராஜை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 320 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பொன்மாந்துறை தெற்குத்தெருவை சேர்ந்த மாயன் (44), அவரது மனைவி பாக்கியலட்சுமி (35) ஆகிய 2 பேரும் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மது விற்ற தம்பதியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 320 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story