மருந்து சீட்டுகளுடன் மோட்டார் சைக்கிள்களில் சுற்றிய 50 பேருக்கு எச்சரிக்கை - போலீசார் 2 மணி நேரம் காத்திருக்க வைத்து அனுப்பினர்
திண்டுக்கல்லில், தடையை மீறி மருந்து சீட்டுகளுடன் மோட்டார் சைக்கிள்களில் சுற்றிய 50 பேரை போலீசார் எச்சரிக்கை செய்தனர். பின்னர் 2 மணி நேரம் காத்திருக்க வைத்து அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையொட்டி, திண்டுக்கல் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. மேலும் நகரின் முக்கிய சாலைகள் தடுப்புகள் மூலம் அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பொதுமக்கள் தேவையின்றி வெளியில் நடமாட வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் தடையை மீறி திண்டுக்கல் நகரில் பலர் காலையில் இருந்தே மோட்டார் சைக்கிள்களில் நாகல்நகர், பஸ் நிலையம், திருச்சி ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி வீட்டுக்கு செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனாலும் மக்கள் வெளியில் வருவது குறையவில்லை.
இதையடுத்து காலை 9.30 மணி முதல் திண்டுக்கல் காமராஜர் சிலை அருகே மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். சிறிது நேரத்திலேயே அங்கு வந்த 50-க்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரிடமும் எதற்காக வெளியே வந்தீர்கள் என்று போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ்குமார் மற்றும் போலீசார் விசாரித்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களில் பெரும்பாலானோர் மருந்து வாங்குவதற்கு வந்ததாக கூறி அதற்காக டாக்டர்கள் பரிந்துரை செய்த மருந்து விவரங்கள் அடங்கிய சீட்டுகளையும் காண்பித்தனர். மேலும் தாங்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்துள்ளோம் எங்களை விட்டுவிடுங்கள், இனி வெளியில் வரமாட்டோம் என்று கூறி போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.
ஆனால் அதை ஏற்க மறுத்த போலீசார், மருந்து சீட்டுகளையே எல்லோரும் கொண்டு வந்தால் எப்படி அனுமதிக்க முடியும் என்றனர். பின்னர் அவர்களை அங்கேயே காத்திருக்கும்படி போலீசார் தெரிவித்தனர். காலை 11.30 மணி வரை 2 மணி நேரம் பொதுமக்கள் அங்கு காத்திருந்தனர்.
இதற்கிடையே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அங்கு வந்தார். அவர், மருந்துகள் வாங்குவது என்றால் உங்கள் ஏரியாவில் உள்ள மருந்து கடைகளில் வாங்கிக்கொள்ள வேண்டும். நகருக்குள் தேவையில்லாமல் வரக்கூடாது என்று எச்சரித்து அவர்களை அனுப்பி வைத்தார். தடையை மீறி வெளியே வந்த பொதுமக்கள், போலீசாரிடம் வாக்குவாதம் செய்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் வேடசந்தூரில் ஆத்துமேடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அந்த வழியாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
வாகன ஓட்டிகளிடம் அவர் பேசும்போது, அனைவரும் வெளியில் சுற்றித்திரிந்தால் எப்படி கொரோனா வைரசை கட்டுப்படுத்தமுடியும். இது, உங்களது வாழ்க்கை பிரச்சினை. உங்களது குடும்பத்தினர், பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரின் வாழ்க்கை. எனவே வெளியில் திரியாமல் உங்கள் குடும்பத்தினரோடு தனிமையாக இருக்க பழகிக் கொள்ளுங்கள். இனி வெளியில் சுற்றி திரிந்தால் இருசக்கர வாகனங் கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.
இதேபோல் நிலக்கோட்டை நால்ரோடு பகுதியில் நேற்று மாலை பொதுமக்கள் ஏராளமானோர் இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் வந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த நிலக்கோட்டை போலீசார், பொதுமக்களை நிறுத்தி எச்சரித்தனர். இனி வரும் காலங்களில் இதுபோன்று சாலைகளில் தேவையின்றி சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றார்.
Related Tags :
Next Story