படவேட்டில் கற் கட்டிடம் கண்டுபிடிப்பு


படவேட்டில் கற் கட்டிடம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 27 March 2020 3:30 AM IST (Updated: 27 March 2020 9:02 AM IST)
t-max-icont-min-icon

படவேட்டில் தாமரை ஏரி கால்வாய் தோண்டும் போது கற் கட்டிடம் கண்டுபிடிக்கப்பட்டது.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலத்தை அடுத்த படைவீட்டில் கடந்த சில நாட்களாக தாமரை ஏரிக்கு நீர்வரத்துக் கால்வாய் தோண்டும் பணி பொக்லைன் எந்திரம் மூலம் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனியார் நிலத்தின் வழியே கால்வாய் தோண்டப்பட்டது. அப்போது பெரிய அளவிலான கற்கள் பூமிக்கடியில் புதைத்திருந்தது கண்டெடுக்கப்பட்டது.

பழங்காலத்தில் படவேடு பகுதியை சம்புவராயர் மன்னர்கள் தலைநகரமாக ஆண்டு வந்தனர். அப்போது பூமிக்கடியில் அழிந்து போன கோட்டையாகவோ, அகழியாகவோ இருந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர் படவேடு அமுல்ராஜ் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கி.பி.1237-ல் படைவீட்டை தலைநகரமாக கொண்டு சம்புவராயர்கள் தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தனர். இவர்களின் காலத்தில் படைவீடு கோட்டை நகரமாக திகழ்ந்தது. சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்த இவர்களின் கோட்டை 2 பிரிவுகளாக பெரிய கோட்டை, சின்ன கோட்டை என்ற பெயருடன் அடிப்பகுதி கருங்கற்களாலும், மேற்பகுதி சுட்ட செங்கற்களாலும் கட்டப்பட்டிருந்தது.

பெரிய கோட்டை அரசர்களின் வசிப்பிடமாகவும், சின்ன கோட்டை அமைச்சர்கள், பொதுமக்களின் வாழ்விடமாகவும் இருந்தது. பெரிய கோட்டை இருந்த பகுதி ‘கோட்டைக்கரை’ என்ற பெயரிலும், சின்ன கோட்டை இருந்த பகுதி ‘சின்ன கோட்டைக்கரை’ என்ற பெயரிலும் தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தாமரை ஏரிக்கு கால்வாய் அமைக்கும் பணியை படைவீடு ஊராட்சி மன்றம் செயல்படுத்தி வரும் நிலையில் சம்புவராய அரசர்களின் கோட்டை கற்கள் மேலே வருகின்றன. இது வரலாற்று ஆய்வாளர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, மாவட்ட கலெக்டர் கந்தசாமி இந்த இடத்தை பார்வையிட்டு உடனடியாக, பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்து அகழாய்வு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது பொக்லைன் மூலம் அப்புறப்படுத்தும் கற்கள் டிராக்டர் மூலம் படவேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கொட்டி வைத்துள்ளனர்.


Next Story