நாகர்கோவில், டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை தூக்கிச் சென்ற மதுபிரியர்கள் - போலீசார் விசாரணை


நாகர்கோவில், டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை தூக்கிச் சென்ற மதுபிரியர்கள் - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 27 March 2020 4:30 AM IST (Updated: 27 March 2020 9:02 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை தூக்கிச் சென்ற மதுபிரியர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

நாகர்கோவில்,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. கடைசி நாள் அன்று குமரி மாவட்டத்தில் 6 மணி நேரத்தில் ரூ.6 கோடிக்கு மது விற்பனை ஆகியிருந்தது.

மதுக்கடைகள் மூடப்பட்டதால் தினந்தோறும் மதுகுடிக்கும் வழக்கத்தை கொண்டிருந்த மது பிரியர்கள் செய்வதறியாது திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை தூக்கிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

நாகர்கோவில் இளங்கடை பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் சங்கரலிங்கம் (வயது 40). இந்த கடையின் முன்பக்க கிரில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுகுறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுபற்றிய தகவல் அறிந்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பால்துரையும் திருட்டு நடந்த கடைக்கு வந்து பார்வையிட்டார். இதில் ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களும், ரூ.1500 ரொக்கப்பணமும் திருடு போய் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுகுடிக்க முடியாமல் தவித்து வரும் மதுபிரியர்கள் தான் இந்த கைவரிசையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Next Story