திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் எளிமையாக நடைபெற்ற திருமணங்கள் - குறைந்த அளவிலேயே உறவினர்கள் பங்கேற்பு
திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று எளிமையாக திருமணங்கள் நடைபெற்றன. இதில் குறைந்த அளவிலேயே உறவினர்கள் பங்கேற்றனர்.
திருச்சி,
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் வருகிற ஏப்ரல் 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவும் ஏற்கனவே அமலில் உள்ளது. இந்த உத்தரவுகளினால் மக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. திருமண மண்டபங்களில் கடந்த 16-ந் தேதிக்கு முன்பாக முன்பதிவு செய்யப்பட்ட திருமணங்களை நடத்தி முடிக்கலாம் என விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனாலும், திருச்சி உறையூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற வேண்டிய திருமண விழா ரத்து செய்யப்பட்டு மணமகள் வீட்டிற்கு மாற்றப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, நரசிங்கன்பேட்டை தச்சன்தெருவை சேர்ந்த ஜவுளி கடை ஊழியர் கண்ணன் என்ற சந்தான கிருஷ்ணனுக்கும், திருச்சி உறையூர் ராமலிங்கநகர் நெசவாளர் காலனியை சேர்ந்த அமுதாவுக்கும் நேற்று காலை நடைபெற இருந்த திருமணம் மணமகள் வீட்டில் எளிய முறையில் வைதீக முறைப்படி நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த திருமண விழாவில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டாரின் மிக நெருங்கிய உறவினர்கள் 15 பேர் மட்டுமே கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். அவர்களுக்கு வீட்டிலேயே விருந்தும் நடைபெற்றது.
இதேபோல, திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மாகாளிகுடியை சேர்ந்த ஒருவருக்கும், ஸ்ரீரங்கம் தாலுகா சாத்தனூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் முன்பு எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் பெரிய நாயகி அம்பாள் சமேத அரங்குளநாதர் கோவில் வாசலில் வைத்து 2 திருமணங்கள் நடைபெற்றன.
இந்த திருமணங்களிலும் குறைந்த அளவிலேயே உறவினர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலர் முக கவசம் அணிந்திருந்தனர்.
Related Tags :
Next Story