அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் தனி வார்டுகளை வேறு பகுதிக்கு மாற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்
பழைய ராணியார் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் தனி வார்டுகளை வேறு பகுதிக்கு மாற்றக்கோரி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் உள்ள பழைய ராணியார் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பழைய ராணியார் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா வைரஸ் தனி வார்டுகளால், தங்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. எனவே கொரோனா வைரஸ் தனி வார்டுகளை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ராணியார் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் முருகப்பன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாசில்தார் முருகப்பன், கொரோனா வைரஸ் காற்றினால் பரவும் தொற்று நோய் அல்ல. இது ஒருவரை ஒருவர் தொடுவதாலும், மற்றவர்கள் தும்மும்போது, இருமும் போது அந்த எச்சில் நமது உடலில் படுவதாலும் கொரோனா வைரஸ் பரவுகிறது. எனவே அனைவரும் வீட்டில் இருந்தாலே கொரோனா வைரஸ் பரவாது என்றார். இதையடுத்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
முன்னதாக தி.மு.க. புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி எம்.எல்.ஏ. பழைய ராணியார் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட தனி வார்டுகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story