ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு சாலையில் தோப்புக்கரணம் போட வைத்து போலீசார் தண்டனை


ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு சாலையில் தோப்புக்கரணம் போட வைத்து போலீசார் தண்டனை
x
தினத்தந்தி 27 March 2020 3:45 AM IST (Updated: 27 March 2020 10:09 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு சாலையில் தோப்புக் கரணம் போட வைத்து போலீசார் தண்டனை வழங்கினர்.

சேலம்,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பால், காய்கறி, பழங்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிரதான சாலைகள் முழுவதும் மூடப்பட்டு அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சிலர் எதை பற்றியும் கவலைப்படாமல் வழக்கம்போல் மோட்டார் சைக்கிளில் வீதிகளில் ஊர் சுற்றி வருவதை காணமுடிகிறது. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைக்கிறார்கள். சேலம் மாநகரில் நேற்று ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களை போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி தோப்புக்கரணம் போட வைத்து நூதன தண்டனை வழங்கினர். மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் துணை கமிஷனர் செந்தில், டவுன் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார், ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

அதேசமயம், வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்றால் சாலையில் தோப்புக்கரணம் செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி ஊரடங்கு உத்தரவை மீறிய 50-க்கும் மேற்பட்டோருக்கு தோப்புக்கரணம் போட வைத்து போலீசார் நூதன தண்டனை வழங்கினர். ‘வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம்’ என்ற சினிமா பாடலுக்கு ஏற்ற மாதிரி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையில் எதை பற்றியும் கவலைப்படாமல் சாலையில் சுற்றித்திரியும் நபர்களுக்கு அபராதம், வழக்கு, கைது, தோப்புக்கரணம் உள்ளிட்ட பல்வேறு தண்டனை கிடைக்கலாம் என்பதால் பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று போலீஸ் துணை கமிஷனர் செந்தில் தெரிவித்துள்ளார்.

Next Story