ஆன்மிக சுற்றுலா சென்ற நேரத்தில் ஊரடங்கு: புதுச்சேரியை சேர்ந்த 22 பேர் வாரணாசியில் தவிப்பு


ஆன்மிக சுற்றுலா சென்ற நேரத்தில் ஊரடங்கு: புதுச்சேரியை சேர்ந்த 22 பேர் வாரணாசியில் தவிப்பு
x
தினத்தந்தி 27 March 2020 10:31 AM IST (Updated: 27 March 2020 10:31 AM IST)
t-max-icont-min-icon

ஆன்மிக சுற்றுலா சென்ற நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் புதுச்சேரியை சேர்ந்த 22 பேர் வாரணாசியில் தவித்து வருகின்றனர்.

புதுச்சேரி, 

புதுவை நெல்லித்தோப்பு தொகுதியை சேர்ந்த காய்கறி விற்கும் பெண்கள் 18 பேர் உள்பட 22 பேர் கடந்த வாரம் காசி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆன்மிக சுற்றுலாவாக வட இந்தியாவுக்கு சென்றனர். அவர்கள் புகழ்பெற்ற ஆன்மிக தலங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.

சுற்றுலா பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 29-ந்தேதி ஊருக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சுறுத்தல் தலைதூக்கியதையடுத்து கடந்த 24-ந்தேதி முதல் இந்திய அளவில் ஊரடங்கு உத்தரவினை பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் பஸ், ரெயில், விமான போக்கு வரத்து என அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இதனால் வட இந்தியாவுக்கு ஆன்மிக சுற்றுலாவாக சென்றவர்கள் வாரணாசியில் தங்கி யிருக்கும் இடத்தை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அவதிக்குள்ளாகினர். சரிவர உணவு பொருட்கள் கிடைக்காத நிலையும் ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் அவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். தங்களது நிலைமை குறித்து புதுச்சேரியில் உள்ள தங்களது உறவினர் களிடம் தெரிவித்தனர். வாரணாசியில் இருந்து தங்களை புதுச்சேரிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்து தருமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் வாரணாசியில் உள்ள அதிகாரிகளை தொடர்புகொண்டு புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு உணவு உள்ளிட்டவை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

Next Story