நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் மேலும் 2 பேர் அனுமதி
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா சிறப்பு வார்டில் மேலும் 2 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 2 ஆயிரத்து 268 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு சந்தேகத்தின்பேரில் வரும் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ராதாபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது 5 பேர் அங்குள்ள தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பாளையங்கோட்டையை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரும், 23 வயதுடைய மற்றொருவரும் என மொத்தம் 2 பேர் நேற்று கொரோனா தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. எனவே, நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா தனிமை வார்டில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story