புழல் சிறை கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் செல்போன் ‘வீடியோ கால்’ பேசினர்
புழல் சிறை கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் செல்போன் வீடியோ காலில் பேசினர்.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த புழல் தண்டனை சிறையில் 700-க்கும் மேற்பட்ட கைதிகளும், விசாரணை சிறையில் 1,500-க்கும் மேற்பட்ட கைதிகளும், பெண்கள் சிறையில் 100-க்கும் மேற்பட்ட பெண் கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 24-ந் தேதி முதல் கைதிகளை அவர்களது குடும்பத்தினர் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. மேலும் விசாரணை சிறையில் சிறுசிறு குற்றங்களில் கைது செய்யப்பட்ட கைதிகள் 226 பேரையும், பெண் கைதிகள் 36 பேரையும் கோர்ட்டு மூலம் ஜாமீன் பெற்று அரசு விடுவிக்க நடவடிக்கை எடுத்தது.
இந்தநிலையில் சிறையில் உள்ள கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் செல்போன் வீடியோ கால் மூலம் 5 நிமிடம் பேச அரசு அனுமதி அளித்தது. இதற்காக தண்டனை சிறைக்கு 5, விசாரணை சிறைக்கு 8, பெண்கள் சிறைக்கு ஒன்று என 14 சாம்சங் ஆண்ட்ராய்டு போன்களை வழங்கியது. இதன் மூலம் நேற்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் தனித்தனியாக 5 நிமிடம் செல்போன் வீடியோ காலில் பேச வைக்கப்பட்டனர். தங்கள் குடும்பத்தாருடன் செல்போன் வீடியோ காலில் பேசியதால் கைதிகளும், அவர்களது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கைதிகள் மட்டுமே அவர்களது குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ள முடியும். ஆனால் அவர்களது குடும்பத்தார் மீண்டும் கைதிகளை தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புழல் சிறை சூப்பிரண்டு செந்தாமரைக்கண்ணன் நேரடி பார்வையில் கைதிகள் அவர்களது குடும்பத்தினருடன் பேச வைக்கப்பட்டனர். இதற்காக சிறை கைதிகளின் குடும்பத்தினர் தமிழக அரசுக்கும், சிறை துறைக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Related Tags :
Next Story