கர்நாடகத்தில் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் - எடியூரப்பாவுக்கு பிரதமர் மோடி உத்தரவு


கர்நாடகத்தில் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த வேண்டும் - எடியூரப்பாவுக்கு பிரதமர் மோடி உத்தரவு
x
தினத்தந்தி 27 March 2020 11:45 PM GMT (Updated: 27 March 2020 11:19 PM GMT)

கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் பிரதமர் மோடி மிகுந்த கவலை அடைந்துள்ளார்.

மேலும் கர்நாடகத்திலும் இதுவரை 61 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தவிர 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் கர்நாடகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் மக்கள் பொது இடங்களில் சுற்றித்திரிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், நேற்று பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்-மந்திரிகளையும் தொடர்பு கொண்டு பேசினார். அதே போல் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் மோடி தொலைபேசியில் பேசினார். கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியிருப்பது குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் அவர் கேட்டு அறிந்தார்.

அப்போது, எடியூரப்பா, கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விவரித்தார். ேமலும் அவர், கொரோனா வைரசை கட்டுப்படுத்த தேவையான நிதி உதவி வழங்குமாறு பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்

இதைகேட்டறிந்த பிரதமர் மோடி, கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் மக்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், அதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். மேலும், ஊரடங்கு உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று எடியூரப்பாவுக்கு பிரதமர் உத்தரவிட்டு உள்ளார்.

Next Story