எத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்தியும் உதாசீனம்: சமூக இடைவெளியை பின்பற்றாமல் முண்டியடித்து காய்கறி வாங்கிய மக்கள்


எத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்தியும் உதாசீனம்: சமூக இடைவெளியை பின்பற்றாமல் முண்டியடித்து காய்கறி வாங்கிய மக்கள்
x
தினத்தந்தி 28 March 2020 3:30 AM IST (Updated: 28 March 2020 6:01 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் காய்கறி சந்தையாக பஸ் நிலையம் மாறியது.அங்கு சமூக இடைவெளி விட்டு நிற்க வட்டம் போட்டிருந்தும் மக்கள் அதை பின்பற்றாமல் முண்டியடித்துக் கொண்டு வாங்கிச்சென்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள காய்கறி சந்தையில் பொதுமக்கள் கூடுவதை தடுக்க பஸ் நிலையத்தை நகராட்சி நிர்வாகம் காய்கறி சந்தையாக மாற்றி சமூக இடைவெளி விட்டு பொதுமக்கள் நின்று காய்கறி வாங்க வட்டம் போடப்பட்டது.

எனினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை பொருட்படுத்தாத பொதுமக்கள் பஸ் நிலையத்திற்குள் சமூக இடைவெளியை கடை பிடிக்காமல் முண்டி அடித்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக காய்கறி வாங்கி சென்றனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, உலகையே கொரோனா அச்சுறுத்தி வரும்போது மக்களை இதில் இருந்து காக்க அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

பல துறை அலுவலர்களும் உயர் அதிகாரிகளும் இரவு பகலாக விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் எதையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் தான் தோன்றித்தனமாக நடந்து கொள்வது வேதனை தருகிறது என்று குறிப்பிட்டனர்.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டையில் அண்ணாசிலை பகுதியில் இயங்கி வந்த காய்கறி கடைகள் அனைத்தும் பழைய பஸ் நிலையம் பகுதிக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளன. போதிய இடைவெளி விட்டு வியாபாரம் செய்யப்பட்டதோடு காய்கறி வாங்க வந்தவர்களை கைகளை கழுவியபின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

சமூக இடைவெளி குறியீடுகள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் கூட்டம் குறைவாகவே இருந்தது.

நகராட்சி சுகாதார ஆய்வாளர் அய்யப்பன் தலைமையில் அலுவலர்கள் அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் புதிய பஸ் நிலையம், பள்ளி மைதானத்திலும் காய்கறி கடைகள் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

சிவகாசி

சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதி வந்தது. இதனால் காய்கறி வியாபாரிகளிடம் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் நகராட்சிக்கு கடை வாடகை செலுத்தும் 142 கடைக்காரர்கள் நகராட்சி நிர்வாகம் அறிவிக்கும் இடங்களில் தற்காலிக கடைகளை வைத்து காய்கறிகளை விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டது.

இதன்படி சிவகாசி பெரியகுளம் கண்மாய் பகுதியில் 30 பேருக்கும், சிறுகுளம் கண்மாய் பகுதியில் 30 பேருக்கும், சாத்தூர் ரோட்டில் உள்ள பஸ் நிலையம் எதிரில் 30 பேருக்கும், விஸ்வநத்தம் மார்க்கெட் பகுதியில் 30 பேருக்கும், சித்துராஜபுரம் செல்லும் வழியில் உள்ள செண்பகவிநாயகர் கோவில் அருகில் 22 பேருக்கும் கடை வைத்துக்கொள்ள இடம் ஒதுக்கப்பட்டது. தற்காலிக காய்கறி கடைகள் வைக்க ஒதுக்கப்பட்ட இடங்களை சப்-கலெக்டர் தினேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆலோசனைவழங்கினார். அதன் பின்னர் வியாபாரிகள் தள்ளுவண்டி மற்றும் வேன்களில் காய்கறிகளை கொண்டு வந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்தனர். இவர்களிடம் சமூக இடைவெளி விட்டு வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். இந்த ஏற்பாடுகளை நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார அலுவலர் பேச்சிமுத்து, வருவாய் ஆய்வாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சிவகாசி நகராட்சி பகுதியில் உள்ள கடைகள் மற்றும் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படும் இடங்களில் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து கடைக்காரர்களிடம் கேட்டால் தற்போது உள்ள பொருட்கள் முடிந்து விட்டால் வேறு பொருட்கள் வர 1 மாதம் ஆகிவிடும் அதனால் வேண்டும் என்றால் வாங்கி கொள்ளுங்கள், இல்லை என்றால் பொருட்கள் இல்லாமல் போய்விடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என்றும் புகார் கூறப்படுகிறது.

Next Story