பழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா முதல்முறையாக ரத்து - கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி


பழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா முதல்முறையாக ரத்து - கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி
x
தினத்தந்தி 27 March 2020 10:15 PM GMT (Updated: 28 March 2020 3:50 AM GMT)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா முதல்முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பழனி,

பழனி முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி உத்திர திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழாவின்போது பக்தர்கள் கரூர் மாவட்டம் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து காவடியாக கொண்டு வந்து பழனி முருகன் கோவிலில் அபிஷேகம் செய்வார்கள். மேலும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை நடைபெறும்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உயிர்களை வேகமாக காவு வாங்கி வருகிறது. இதையடுத்து அது பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்மிக தலங்களில் பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது.

பழனி முருகன் கோவிலில் வருகிற 31-ந்தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க இருந்தது. விழாவின் 6-ம் நாளான ஏப்ரல் 5-ந்தேதி திருக்கல்யாணமும், அடுத்த நாள் தேரோட்டமும் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட உள்ளதாகவும், மற்றபடி ஆகம விதிப்படி கோவிலில் பூஜைகள் நடைபெறும் என்றும், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஆண்டும் இல்லாத வகையில் தற்போது பங்குனி உத்திர திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்று பழனி வாழ் மக்கள் தெரிவித்தனர்.

Next Story