திண்டுக்கல்லில், 4 இடங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள் திறப்பு - போட்டி போட்டு பொதுமக்கள் வாங்கிச்சென்றனர்


திண்டுக்கல்லில், 4 இடங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள் திறப்பு - போட்டி போட்டு பொதுமக்கள் வாங்கிச்சென்றனர்
x
தினத்தந்தி 28 March 2020 3:30 AM IST (Updated: 28 March 2020 9:20 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் நகரில் 4 இடங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து மற்றும் மளிகை பொருட்களுக்கான கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் காந்திமார்க்கெட்டும் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் காய்கறிகளை வாங்குவதற்காக காந்திமார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது. இதனை தடுக்கும் விதமாக திண்டுக்கல்லில் 4 இடங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள் திறக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

அதன்படி பழனி சாலையில் லாரிபேட்டை, மேட்டுப்பட்டி பாஸ்கு மைதானம், நாகல்நகர் பாரதிபுரம் சந்தை, ரவுண்டு ரோடு எஸ்.எம்.பி.எம். பள்ளி அருகில் ஆகிய 4 இடங்களில் நேற்று காலை 7 மணி முதல் தற்காலிக காய்கறி சந்தைகள் செயல்பட தொடங்கின.

இங்கு விவசாயிகள், வியாபாரிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். முன்னதாக பொதுமக்கள் கூட்டமாக நின்று காய்கறிகளை வாங்குவதை தடுக்கும் வகையில் சந்தையில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு தற்காலிக கடைகள் முன்பும் 1 மீட்டர் இடைவெளி விட்டு சதுர வடிவில் கோடுகள் வரையப்பட்டிருந்தன.

அதற்குள் பொதுமக்கள் நின்று காய்கறிகளை வாங்கினர். சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கும், பீன்ஸ் ரூ.110-க்கும், கத்தரி ரூ.45-க்கும், முருங்கை ரூ.45-க்கும், சின்ன வெங்காயம் ரூ.85-க்கும், பெரிய வெங்காயம் ரூ.45-க்கும், பாகற்காய் ரூ.45-க்கும் விற்பனை ஆனது. மற்ற காய்கறிகளின் விலையும் நேற்று சற்று கூடுதலாகவே இருந்தது. இருந்த போதிலும் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு காய்கறிகளை வாங்கிச்சென்றனர்.

Next Story