பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க கரூரில் 8 இடங்களில் காய்கறி கடைகள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்


பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க கரூரில் 8 இடங்களில் காய்கறி கடைகள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 27 March 2020 10:30 PM GMT (Updated: 28 March 2020 3:50 AM GMT)

பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க கரூரில் 8 இடங்களில் காய்கறி கடைகள் அமைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கரூரில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உழவர் சந்தை, அம்மா உணவகம், காமராஜர் மார்க்கெட், வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கரூர் உழவர்சந்தை, காமராஜர் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் காய்கறிகள் வாங்குவதற்காக அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்கவும், கொரோனா தொற்று பரவாமல் இருக்க சமூக விலகலை கடைபிடிக்கவும் ஏதுவாக பொதுமக்களின் வசதிக்கேற்ப கரூர் நகராட்சிக்குட்பட்ட சில இடங்களில் காய்கறிகள் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருவள்ளுவர் மைதானம், வெங்கமேடு எம்.ஜி.ஆர்.சிலை அருகே, குளத்துப்பாளையம் சாலை வாரச்சந்தை அருகே, பசுபதிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே, காந்திகிராமம் மைதானம், ஈரோடு சாலை வேலுச்சாமிபுரம், தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி முன்புறம், செங்குந்தபுரம் பிரதான சாலை பகுதி ஆகிய 8 இடங்களில் காய்கறி கடைகள் வைத்து வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

மளிகைப்பொருட்கள், மருந்துபொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பிற மாவட்டங்களில் இருந்து கொண்டுவர வேண்டும் என்றாலும் அதற்கான உதவிகளை செய்துதர அரசு தயாராக உள்ளது. 8 இடங்களிலும் அமைக்கப்படும் காய்கறி கடைகளின் முன்புறம் பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில், ஒரு மீட்டர் இடைவெளியில் கோடு போடப்பட்டு அந்த வரிசையில் நின்று பொருட்களை வாங்க ஏற்பாடு செய்யப்படும். இந்த நடைமுறை முறையாக பின்பற்றப்படுகின்றதா? என்பது குறித்து கண்காணிக்க நகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது கலெக்டர் அன்பழகன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, கரூர் நகராட்சி ஆணையர் சுதா, உணவுப்பாதுகாப்பு திட்ட நியமன அதிகாரி சசிதீபா, நகராட்சி நகர்நல அதிகாரி ஸ்ரீ பிரியா, உதவிப்பொறியாளர் நக்கீரன், கரூர் தாசில்தார் அமுதா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story