“நாளிதழ்கள் வினியோகம் செய்பவர்களுக்கு தடை இல்லை” - தென்காசி போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் பேட்டி
“நாளிதழ்கள் வினியோகம் செய்பவர்களுக்கு தடை இல்லை“ என்று தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதத்திலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள போலீசாரில் 80 சதவீதம் பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். பெண் போலீசாரை பொறுத்தவரை கர்ப்பிணியாக இருப்பவர்கள் பணிக்கு அனுமதிக்கப்படவில்லை. 24 மணி நேரமும் போலீசார் அனைத்து இடங்களிலும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். வாகனங்களில் ஒலிபெருக்கி பொருத்தி நகர்புறம் மற்றும் கிராமங்களுக்கு சென்று கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் சுகாதாரத்துறை குழுவினருடன், போலீசாரும் சென்று கண்காணித்து வருகிறார்கள். தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அத்தியாவசிய பொருட்கள் செல்வதில் ஏற்படும் பிரச்சினைகளை பேசி தீர்த்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், இறைச்சி போன்றவற்றை கொண்டு செல்ல தடை இல்லை. இதே போல் தினசரி நாளிதழ்கள் வினியோகம் செய்பவர்களுக்கு எவ்வித தடையும் இல்லை. இதுகுறித்து போலீசாருக்கும் உரிய உத்தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் சுகாதாரத்துறை, மின்வாரியம், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்பவர்கள் போன்றவர்களுக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வருகிற 14-ந் தேதி வரை செல்லத்தக்க அளவில் அடையாள அட்டை வழங்குகிறார். அதனை பெற்றுக் கையில் வைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story