காஞ்சீபுரத்தில் சில்லரை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை


காஞ்சீபுரத்தில் சில்லரை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை
x
தினத்தந்தி 29 March 2020 3:45 AM IST (Updated: 29 March 2020 3:03 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பெருநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி காஞ்சீபுரம் மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றாக கூடுவதை தவிர்ப்பதற்காக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் வார்டுகள் மற்றும் தெருக்களில் உள்ள கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்திடும் சில்லரை வியாபாரிகள், காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட் மற்றும் ஜவஹர்லால் நேரு மார்க்கெட் செல்ல காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

அத்துடன் சில்லரை வியாபாரிகளுக்கு காஞ்சீபுரம் நகராட்சியின் மூலமாக அனுமதி மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும். இவை இரண்டும் உள்ள சில்லரை வியாபாரிகள் மட்டுமே மார்க்கெட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்திருந்தார்.

அதன்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சீபுரம் காந்திரோடு தேரடியில் பந்தல் அமைக்கப்பட்டு அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காஞ்சீபுரம் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் இருந்து ராஜாஜி மார்க்கெட்டுக்கு வந்த சில்லரை வியாபாரிகள் சுகாதாரத்துறையினர் மூலம் இடைவெளிவிட்டு போடப்பட்டு இருந்த கோட்டினுள் வரிசையில் காத்து நின்றனர். சில்லரை வியாபாரிகள் அனைவரும் முககவசம் அணிந்து வந்து இருந்தனர்.

பின்னர் அவர்களிடம் பெயர், வார்டு எண், கடையின் விலாசம், கைபேசி எண் ஆகியவற்றை நகராட்சி ஊழியர்கள் கேட்டறிந்து, வியாபாரிகளின் புகைப்படம் ஒட்டி, நகராட்சி கமிஷனர் கையெழுத்திடப்பட்ட அனுமதி மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

இந்த பணியை காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், தாசில்தார் பவானி, நகராட்சி கமிஷனர் ஆர்.மகேஸ்வரி ஆகி யோர் ஆய்வு செய்தனர்.

Next Story