108 ஆம்புலன்சு ஊழியர்களுக்கு ஒருமாத சிறப்பு ஊதியம்: முதல்-அமைச்சருக்கு மதுரை எம்.பி. வேண்டுகோள்
108 ஆம்புலன்சு ஊழியர்களுக்கு ஒருமாத சிறப்பு ஊதியம் வழங்க முதல்-அமைச்சருக்கு மதுரை எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை எம்.பி.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை,
கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் பொது சுகாதாரத்துறை ஊழியர்கள் சிறப்பாக பணியாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு ஒருமாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தார்.அதுபோல் தமிழகம் முழுவதும் உயிர் காக்கும் சேவையை இரவு பகலாக செய்து கொண்டிருக்கும் 108 ஆம்புலன்சு ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.தமிழகம் முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மேலும் திறம்பட செயலாற்ற இந்த அறிவிப்பு மிக பயனுள்ளதாக இருக்கும். எனவே 108 ஆம்புலன்சு சேவையை வழங்கும் நிறுவனத்தின் வழியாகவோ, நேரடியாகவோ இச்சிறப்பு ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.
அதே போல கொரோனா நோயாளிகளை கையாள்வதற்கென்று தீர்மானிக்கப்பட்டுள்ள ஆம்புலன்சில் அனைத்து வகையான “கொரோனா கிட்” வழங்கப்பட்டுள்ளது. மற்ற ஆம்புலன்சுகளுக்கும் போதுமான முககவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். உதாரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள 33 ஆம்புலன்சுகளில் 5 ஆம்புலன்சுகள் கொரோனா நோயாளிகளை கையாள்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ஊழியர்களுக்கு அனைத்துவகை பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற ஆம்புலன்சுகளில் போதுமான அளவு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. எனவே மாநிலம் முழுவதும் செயல்படும் 108 ஆம்புலன்சு ஊழியர்கள் அனைவருக்கும் போதுமான பாதுகாப்பு உபகரணங்களையும், ஒருமாத சிறப்பு ஊதியத்தையும் வழங்கும் படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story