ஆதரவற்றோருக்கு சமுதாய கூடங்களில் உணவு - மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக மதுரையில் ஆதரவற்றோர் பசி பட்டினியால் அவதிப்பட கூடாது என்பதற்காக சமுதாய கூடங்களில் உணவு வழங்கப்படுகிறது. அதனை மாநகராட்சி கமிஷனர் விசாகன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
மதுரை,
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்கள் விளாங்குடி சொக்கநாதபுரம் 2-வது தெரு சமுதாய கூடத்திலும், பூங்கா முருகன் கோவில் சஷ்டி மண்டபத்திலும், சின்ன சொக்கிகுளம் காக்கை பாடினியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கீரைத்துறை ராணிபொன்னம்மாள் சாலையில் உள்ள முதியோர் இல்லத்திலும், பழங்காநத்தம் சமுதாய கூடத்திலும், ஹார்விப்பட்டி சமுதாய கூடத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 230 பேர் உள்ளனர்.அவர்களுக்கு உணவு வழங்குவதற்காக பூங்கா முருகன் கோவில் சஷ்டி மண்டபம், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு மாநகராட்சி வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சுப்பிரமணியபுரம் சமுதாய கூடத்திலும் சமுதாய சமையல் கூடம் அமைக்கப்பட்டு ஒரு வேளைக்கு சுமார் 700 பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் மாநகராட்சியின் 12 அம்மா உணவகங்களிலும் காலை 12 ஆயிரத்து 800 இட்லிகளும், பகலில் 4 ஆயிரத்து 590 சாம்பார் சாதமும், 2 ஆயிரத்து 950 தயிர்சாதமும் மற்றும் இரவு 9 ஆயிரத்து 400 இட்லிகளும், 100 வெஜிடபிள் பிரியாணியும் என மூன்று வேளைகளிலும் உணவு தயாரிக்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு தங்கு தடையின்றி சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது நிர்வாக அலுவலர்கள் மணி, வரலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story