பூந்தமல்லி அருகே, அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறியா?
பூந்தமல்லி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? என டாக்டர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
பூந்தமல்லி,
பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒருவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மும்பை சென்றுவிட்டு ஒரே நாளில் சென்னை திரும்பி வந்துவிட்டார். அதன்பிறகு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என தெரிகிறது. இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசு டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து டாக்டர்கள் அந்த நபரை பரிசோதனை செய்து, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? என டாக்டர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் பூந்தமல்லி நகராட்சி அதிகாரிகள் அந்த அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர். மேலும் 54 வீடுகளை கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
வெளியாட்கள் யாரும் உள்ளே செல்லக்கூடாது. உள்ளே இருந்து யாரும் வெளியே வரக்கூடாது. அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் இந்த நபர் இதுவரை எங்கெல்லாம் சென்று வந்தார்?. யாரை எல்லாம் சந்தித்தார்? என்ற பட்டியலையும் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story