சிக்பள்ளாப்பூருக்கு 10 செயற்கை சுவாச கருவிகள் - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் அறிவிப்பு
சிக்பள்ளாப்பூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக 10 செயற்கை சுவாச கருவிகள் வழங்கப்படும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் ராமநகர், சிக்பள்ளாப்பூர் மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினேன். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தேன்.
டாக்டர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வசதிகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமையில் தங்க வைக்க போதுமான கட்டிட வசதிகளையும் ஏற்பாடு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளேன்.
என்-95 வகை முகக்கவசங்கள், 3 அடுக்கு முகக்கவசங்கள், டாக்டர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அந்த மாவட்டங்களுக்கு உடனே வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். இன்னும் 10 நாட்களில் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திற்கு 10 செயற்கை சுவாச கருவிகள் வழங்கப்படும்.
அந்த மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் சந்தைகளுக்கு வருவதில் எந்த தடையையும் ஏற்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளேன். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கவுரிபித்தனூர் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது. சிக்பள்ளாப்பூரில் 33 அறைகள் உள்ள அரசு உண்டு உறைவிட பள்ளி கட்டிடத்தை கொரோனா தனிமை கண்காணிப்பு மையமாக மாற்றியுள்ளோம்.
கொரோனாவை தடுப்பதற்காக கூட்டத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். இதை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.
ராமநகரில் பட்டுக்கூடு கொள்முதல் மற்றும் விற்பனையில் எந்த தடங்கலும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன். ரெயில் நிலையங்களில் தவிப்பவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.
Related Tags :
Next Story