சேலத்தில் 8 இடங்களில் சந்தைகள் அமைப்பு, காய்கறிகள் வாங்க அலைமோதிய கூட்டம் - முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தல்
சேலத்தில் 8 இடங்களில் சந்தையில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நேற்று காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
சேலம்,
கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்க சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தினசரி சந்தைகள் மற்றும் உழவர் சந்தைகள் விசாலமான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அஸ்தம்பட்டி சிறைச்சாலை முனியப்பன் கோவில் வளாகம், புதிய பஸ் நிலையம், தற்காலிக பழைய பஸ் நிலையம், அம்மாபேட்டை செங்குந்தர் மேட்டுத்தெரு, அம்மாபேட்டை காமராஜர் காலனி முதல் தெரு, தாதகாப்பட்டி உழவர் சந்தை, கருங்கல்பட்டி நம்பர்-4 மார்க்கெட் தெரு, கொண்டலாம்பட்டி படையப்பா நகர் என மொத்தம் 8 இடங்களில் காய்கறி சந்தைகள் நேற்று முதல் செயல்பட தொடங்கின.
இதனால் காலை 6 மணிக்கு ஏராளமான பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு திரண்டனர். இதன் காரணமாக காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது அங்கிருந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டும் காய்கறிகள் வாங்க செல்ல வேண்டும் எனவும், மற்றவர்கள் சந்தைக்குள் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தினர். மேலும் காய்கறிகள் வாங்கும் போது ஒருவருக்கு ஒருவர் இடைவெளி விட்டு நின்று காய்கறிகளை வாங்கி செல்லுமாறு கட்டுப்பாடு விதிக்கப் பட்டது.
இதையடுத்து பொதுமக்கள் பலர் நீண்ட வரிசையில் இடைவெளி விட்டு நின்று தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி சென்றனர். அஸ்தம்பட்டி சந்தைக்கு வந்த பொதுமக்களை, அங்கு தயாராக வைத்திருந்த குழாய்களில் கைகளை கழுவிய பிறகே காய்கறிகள் வாங்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகளும் முகக்கவசம் அணிந்து கொண்டு வியாபாரம் செய்தனர்.
காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம் மட்டுமே சந்தைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இது ஒரு புறம் இருக்க, கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக காய்கறிகள் விலை கிடு, கிடுவென உயர்ந்து காணப்பட்டது. கடந்த வாரம் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.20 முதல் 25-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று ஒரு கிலோ ரூ.40-க்கு கத்தரிக்காய் விற்கப்பட்டது. அதே போல் ஒரு கிலோ தக்காளி ரூ.20-ம், முள்ளங்கி ரூ.30-ம், வெண்டைக்காய் ரூ.40-ம், அவரை ரூ.50-ம் விற்பனை செய்யப்பட்டது. அதே போல் வரத்து குறைந்ததால் கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் கீரை வகைகளுக்கு கடும் தட்டுபாடு நிலவியது.
ஆத்தூர் உழவர் சந்தை சேலம் கடலூர் மெயின் ரோடு புதுப்பேட்டையில் நீண்டகாலமாக இயங்கிவந்தது. அந்த இடம் குறுகிய மிகச் சிறிய இடமாக உள்ளதாகவும் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதாக கூறி தற்போது காலியாக உள்ள ஆத்தூர் புதிய பஸ் நிலையத்திற்கு உழவர் சந்தை மாற்ற உதவி கலெக்டர் மு.துரை, ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜீ ஆகியோர் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் உழவர் சந்தை ஆத்தூர் புதிய பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. விவசாயிகள் காய்கறிகளையும் குறைந்த அளவு கொண்டு வந்தனர். வாங்க வந்த நுகர்வோர்கள் மிகக்குறைந்த அளவே காணப்பட்டது. அவர்கள் வரிசையாக சமூகஇடைவெளி விட்டு நின்று காய்கறிகளை வாங்கி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
ஆட்டையாம்பட்டியில் செயல்பட்ட உழவர் சந்தை, ஆட்டையாம்பட்டி பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் பஸ் நிலைய சாலையோரம் கடைகள் அமைக்கப்பட்டு நேற்று வியாபாரம் நடந்தது. இதில் பொதுமக்கள் இடைவெளி விட்டு நின்று காய்கறிகளை வாங்கிச்சென்றனர். மேலும் கால்நடை தீவனங்கள் மாட்டு வண்டியில் கொண்டு வந்து விற்பனை செய்தனர். இதனை கால்நடைகளை வளர்ப்பவர்கள் வாங்கிச்சென்றனர்.
Related Tags :
Next Story