மாவட்டம் முழுவதும் 4 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 442 பேர் கைது


மாவட்டம் முழுவதும் 4 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 442 பேர் கைது
x
தினத்தந்தி 29 March 2020 3:00 AM IST (Updated: 29 March 2020 7:41 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 442 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல்,

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு மத்திய அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றித் திரிபவர்களை போலீசார் கண்டறிந்து வழக்குப்பதிவு செய்வதோடு, அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவை மீறிய 298 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே 4-வது நாளாக நேற்று நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 144 பேர் கைது செய்யப்பட்டதோடு, 69 பேரின் இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 4 நாட்களில் நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 442 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், 200 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதேபோல் நேற்று ஒரே நாளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 10 பேரை கைது செய்த போலீசார் 236 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். கடந்த 4 நாட்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 61 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், 5 ஆயிரத்து 954 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு கார், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தெரிவித்து உள்ளார்.

Next Story