கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் தீயணைப்புத்துறை வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி


கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் தீயணைப்புத்துறை வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி
x
தினத்தந்தி 29 March 2020 3:30 AM IST (Updated: 29 March 2020 7:41 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் தீயணைப்புத்துறை வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரி மற்றும் கட்டிடங்களுக்கு தீயணைப்புத்துறை வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு அறிவுரைப்படி, தீயணைப்பு வீரர்கள் இப்பணியினை மேற்கொண்டனர். இந்த பணியை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி நகராட்சி, ஓசூர் மாநகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகள், கிராம ஊராட்சி அளவில் தினந்தோறும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி நகராட்சியில் புதிய, பழைய பஸ் நிலையம், உழவர் சந்தை, நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு மற்றும் 33 வார்டுகளில் தினந்தோறும் சுழற்சி முறையில் 30 பணியாளர்களை கொண்டு 12 கை பம்புகள், 3 பவர் ஸ்பிரேயர் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. தீயணைப்புத்துறை வாகனம் மூலம் தினமும் 2 முறை அரசு ஆஸ்பத்திரியில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகள் மற்றும் மத்திகிரி, பஸ் நிலையம், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், குடியிருப்பு பகுதிகளில் தினமும் தீயணைப்புத்துறை வாகனம் மற்றும் அதிநவீன எந்திரம், 6 ஸ்பிரேயர், ஓசூர் மாநகராட்சியின் சார்பாக 6 டிராக்டர், ஸ்பிரேயர், 100 கைத்தெளிப்பான் கொண்டு 750 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். சுழற்சி முறையில் 150 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளில் 464 பவர் ஸ்பிரேயர் கொண்டு கிருமி நாசினி தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் ஊராட்சி செயலர்கள் 304 பேரும், தூய்மை பணியாளர்கள் 573 பேரும், தூய்மை காவலர்கள் 2,150 பேரும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்பவர்கள் 884 பேரும், மகளிர் சுய உதவிக்குழுவினர் 832 பேரும், மஸ்தூர்கள் 380 பேரும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இப்பணிகள் அனைத்தும் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் போது நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர். பரமசிவன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர். முத்துச்செல்வன் மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர்.

Next Story