கம்பம், உத்தமபாளையம், வீரபாண்டி பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு நூதன தண்டனை


கம்பம், உத்தமபாளையம், வீரபாண்டி பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு நூதன தண்டனை
x
தினத்தந்தி 28 March 2020 10:15 PM GMT (Updated: 29 March 2020 4:06 AM GMT)

கம்பம், உத்தமபாளையம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு போலீசார் நூதன தண்டனைகளை வழங்கினர்.

கம்பம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், சாலையில் அவசியமின்றி வாகனங்களில் சுற்றி திரியும் சம்பவங்கள் நடந்து வருகிறது. அவ்வாறு சுற்றி திரியும் நபர்களை போலீசார் பிடித்து, தோப்புக்கரணம், தண்டால் எடுத்தல், தேர்வு எழுத வைத்தல் என நூதன தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.

இந்தநிலையில் கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி மற்றும் போலீசார் கம்பம்மெட்டு சாலை பிரிவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அவசியமின்றி மோட்டார் சைக்கிள்களில் சுற்றி திரிந்த நபர்களை போலீசார் பிடித்து நூதன தண்டனை வழங்கினர். அதன்படி பிடிபட்ட நபர்களை ஒரு மீட்டர் இடைவெளியில் வரிசையாக சாலையின் இருபுறமும் நிற்க வைத்தனர். பின்னர் அவர்களிடம் பிளச்சிங் பவுடர்களை கையில் கொடுத்து சாலை மற்றும் தெருக்களில் தூவுமாறு தண்டனை வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து சாலையின் இருபுறமும், தெருக்களிலும் அவர்கள் பிளச்சிங் பவுடர்களை தூவி சுகாதார பணிகளை மேற்கொண்டனர். பின்னர் அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். மேலும் இனிமேல் சாலையில் தேவையில்லாமல் சுற்றி திரியும் நபர்களை பிடித்து நாள் முழுவதும் சுகாதார பணியில் ஈடுபடுத்தப்போவதாகவும் போலீசார் எச்சரித்தனர்.

இதேபோல் உத்தமபாளையம் மற்றும் வீரபாண்டியில் அவசியமின்றி சாலைகளில் சுற்றி திரிந்தவர்களை போலீசார் பிடித்து, வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன், நாட்டின் நன்மைக்கு உறுதுணையாக இருப்பேன் என்று உறுதிமொழி ஏற்க வைத்தும், காகிதத்தில் எழுத வைத்தும் நூதன தண்டனை வழங்கினர். 

Next Story