ஆரணி மார்க்கெட் மூடப்படும் -கலெக்டர் தகவல்
ஆரணி காய்கறி மார்க்கெட் மூடப்படும் என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.
ஆரணி,
ஆரணி காந்தி மார்கெட்டில் காய்கறி வாங்க கூட்டம் அதிகமாக இருந்தது. அதேபோன்று கோட்டை மைதானத்தின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்ட கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதைத்தொடர்ந்து கோட்டை மைதானத்தில் உள்ள மினி விளையாட்டு அரங்கில் தற்காலிக திறந்தவெளி காய்கறி மார்கெட் அமைக்க கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு செய்தார். அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் உடனிருந்தார்.
இதுகுறித்து கலெக்டர் கூறுகையில் கோட்டை மைதானம் உள்புறத்தில் நான்குபுறமும் கடைகள் அமைத்து கொள்ளவும், பொதுமக்கள் 1 மீட்டர் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். கோட்டை மைதானம் வெளிப்புறத்தில் யாரும் கடைகள் வைக்கக்கூடாது. ஒருவர்பின் ஒருவராகத்தான் பொருட்களை வாங்க வேண்டும். தற்போது செயல்பட்டு வரும் காய்கறி மார்கெட் தற்காலிகமாக பூட்டி வைக்கப்படும். உழவர் சந்தையில் வியாபாரம் செய்துவந்த 80 பேருக்கு இங்கு இடம் உண்டு என்றார்.
மேலும் திருவண்ணாமலைமாவட்டத்தில் வருகிற 2-ந் தேதிமுதல் மினி ஆட்டோ முலம் குடும்ப அட்டைக்கு தேவையான அரிசி, சர்க்கரை, பருப்பு, 1000 ரூபாய் வீடுதேடி வரும். யாரும் ரேஷன் கடைக்கு வரவேண்டாம் என்று கூறினார்.
தொடர்ந்து ஆரணி தாலுகா அலுவலகத்தில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ரூ.10 லட்சம் மதிப்பிலான முக கவசங்களை கலெக்டரிடம் வழங்கினார். மேலும் ஆரணி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சமும், அதேபோல் செய்யார் சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.25 லட்சமும் ஒதுக்கியதற்கான கடிதத்தை கலெக்டரிடம் வழங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில் வெளிநாட்டில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்துள்ள 767 நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இன்றுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். திருவண்ணாமலை, செய்யார் அரசு மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் வசதியுடன் 200 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ரூ.4 கோடியே 70 லட்சத்தை ஒதுக்கியுள்ளனர் என்றார்.
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் மைதிலி, தாசில்தார் தியாகராஜன், நகராட்சி ஆணையாளர் கு.அசோக்குமார், ஆவின் துணைத் தலைவர் பாரி பி.பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story