கடலூரில், வீடுகளுக்கு நேரடியாக சென்று மளிகை பொருட்கள் வழங்கும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்


கடலூரில், வீடுகளுக்கு நேரடியாக சென்று மளிகை பொருட்கள் வழங்கும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 March 2020 3:30 AM IST (Updated: 29 March 2020 9:37 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் வீடுகளுக்கு நேரடியாக சென்று மளிகை பொருட்கள் வழங்கும் பணியை கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார்.

கடலூர் முதுநகர், 

கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு அமலில் உள்ளதால், மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருந்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான மளிகை பொருட் களை நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கும் பணியை கடலூர் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டமைப்பு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று கடலூர் முதுநகரில் கடலூர் வணிகர் சங்க பேரமைப்பு கூட்டமைப்பின் தலைவர் துரைராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் அன்புசெல்வன் கலந்து கொண்டு மளிகை மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வீடு வீடாக சென்று விற்பனை விற்பனை செய்யும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி, குடிநீர் கேன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மினி லாரிகளில் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் கலெக்டர் அன்புசெல்வன் கூறுகையில், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் சரக்கு வாகன போக்குவரத்தை கண்காணிக்க மாநில அளவில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம் ஆகிய பகுதிகளில் ஓரிடத்திலிருந்து பொருட் களை மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்ல மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

எனவே அத்தியாவசிய பொருட்கள் தொழிற்சாலை உற்பத்தி பொருட்கள் வெளியில் இருந்து எடுத்து விடப்படும் மூலப்பொருட்கள் ஆகியவற்றுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் கண்காணிப்புக் குழுவிடம் உரிய அனுமதி பெற்று பொருட்களை உள்ளிருந்து வெளியே கொண்டு சொல்லலாம். அதே போல் வெளியில் இருந்தும் பொருட்களை எடுத்து வரலாம். பண்ருட்டியில் பலாபழங்களை வெளியூருக்கு கொண்டு செல்வதற்காக 100 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கும் வகையில் கடலூர் வணிகர் சங்க பேரமைப்பு கூட்டமைப்பு சார்பில் வீடு வீடாக சென்று மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குகின்ற பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கென சில மொபைல் எண்கள் தரப்பட்டுள்ளன. பொதுமக்கள் அந்த எண்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது வணிகர் சங்க பேரமைப்பு கூட்டமைப்பு பொருளாளர் முருகன், நிர்வாகிகள் ராஜா, வீனஸ் ஞானசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story